ஸ்ரீரங்கம் -பரத நாட்டிய கலைஞராகவும், வைணவ சொற்பொழிவாளராகவும், 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கநாதன் நரசிம்மன் என்பவர் மீது, ஜாகிர் உசேன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். நம் நாளிதழுக்கு ஜாகிர் உசேன் நேற்று அளித்த பேட்டி:மத்திய அரசின் சமூக நல்லிணக்க விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவன் நான்.
தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எனக்கு, 'நாட்டிய செல்வன்' என்ற விருது கொடுத்து சிறப்பித்துள்ளார். உலகம் முழுதும் பல நாடுகளில், பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன். பல பட்டங்களை பெற்றுள்ளேன்.நான் பிறப்பால் இஸ்லாமியன். ஆனால், வைணவனாகவே வாழ்ந்து வருகிறேன். பல வைணவ திருத்தலங்களில் ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளேன்.
கடந்த 10ம் தேதி, மதியம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றேன். அமைதியான முறையில் ஆரியபட்டாள் வாசலை கடந்து, கிளி மண்டபத்தில் இருந்து, அங்கு வீற்றிருக்கும் ரங்கநாதரை தரிசிக்க முயன்றேன்.அப்போது, அங்கு வந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், மேற்கொண்டு செல்ல விடாமல் என்னை தடுத்தார். கடவுளை தரிசிக்க விடவில்லை. என் மத அடையாளத்தை கூறி, பக்தர்கள் மத்தியில் என்னை அவமானப்படுத்தினார்.
கொச்சையாகவும், தகாத வார்த்தைகளாலும் பேசினார். ஆலயத்துக்குள் தொடர்ந்து நுழைந்தால் நடப்பதே வேறு என்று கொலை மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சியில் உறைந்து நின்ற என்னை நெட்டி தள்ளினார். ஒரு கட்டத்தில்,வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். இந்த சம்பவம் நடந்த போது, அங்கு பக்தர்களும், கோவில் நிர்வாகிகளும் இருந்தனர். நடந்த சம்பவம் முழுதும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளேன். ரங்கநாதர் மேல் நான் வைத்திருக்கும் பக்தி கோவில் நிர்வாகிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் தெரியும். அதனால், ஒரு போதும் அவர்கள் என்னை தடுத்ததில்லை. ஆனால், சம்பவம் நடந்த போது அங்கிருந்தபக்தர்கள் யாரும் ரங்கராஜன் நரசிம்மனின் அடாவடி நடவடிக்கையை தடுக்கவில்லை; எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
அவமானத்தால் கூனி குறுகி, எம்பெருமான் ரங்கநாதனின் கோவிலில் இருந்து வெளியேறினேன். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். உயர் ரத்த அழுத்தம், அதன் விளைவாக நெஞ்சு வலி ஏற்பட்டதால், அதற்கான சிகிச்சை எடுத்து கொண்டேன்.
கோவிலில் எந்த பொறுப்பிலும் இல்லாத ரங்கராஜன் நரசிம்மன், மத காழ்ப்புணர்வின் அடிப்படையில், ஆலயத்தின் உரிமையாளரை போல தன்னை நினைத்து செயல்படுகிறார். முன் கூட்டியே திட்டமிட்டு, கோவிலுக்குள் நான் செல்வதை கண்காணித்து, வழி மறித்து, அவமதித்து தகாத சொற்களால் பேசினார். கூடவே, கொலை மிரட்டலும் விடுத்தார். மொத்தத்தில், அவர் எனக்கு இழைத்திருப்பது மத தீண்டாமை.
எனவே, இந்திய இறையாண்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிராக செயல்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் மீது காவல் துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்து சொல்ல விரும்பவில்லை
பத்திரிகைகள், நான் செய்த மத தொண்டு மற்றும் சமூக சேவைகள் குறித்து, இதுவரை முறையாக எந்த செய்தியும் வெளியிடவில்லை. ஆனால், முக நுாலில் எவனோ ஒருவன், என்னை பற்றி வெளியிட்ட செய்தி குறித்து தகவல் கேட்பது,எனக்கு கோபத்தை வரவழைக்கிறது. அதனால், இது குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
ரங்கராஜன் நரசிம்மன், ஸ்ரீரங்கம்.
இணை ஆணையர் விசாரிக்க உத்தரவு
பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு, மத ரீதியில் அவமானப்படுத்தப் பட்டதாக தகவல் வந்தது. அப்படிப்பட்ட காரியங்களை யார் செய்தாலும், தமிழக அரசு அதை அனுமதிக்காது. கோவிலுக்குள் நடந்ததாக சொல்லப்படும் சம்பவம் என்பதால், புகார் குறித்து முறையாக விசாரிக்குமாறு, கோவில் இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விஷயத்தில் மேல் நடவடிக்கைகள் குறித்து, முதல்வருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். யாராக இருந்தாலும், மத ரீதியில் கோவில் விஷயங்களை அணுகுவதை ஏற்க முடியாது.
சேகர்பாபு, அமைச்சர், ஹிந்து சமய அறநிலையத் துறை.
புகார் வந்ததும் நடவடிக்கை
பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் கோவிலில் மத ரீதியில் அவமானப்படுத்தப் பட்டதாக புகார் எழுந்துள்ளது. திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு, புகார் அளிக்கப் போவதாக அவர் கூறியுள்ளனர். புகார் பெறப்பட்டதும், போலீஸ் உரிய விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரங்கராஜன் நரசிம்மன் மீது ஏற்கனவே போலீசில் புகார்கள் உள்ளன. இந்த விஷயத்தில் தவறு என்றால், அது யாராக இருந்தாலும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீஸ் அதிகாரி, திருச்சி காவல் ஆணையரகம்.