'டிசம்பர் 12' என்றாலே பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் என்றே கூறுவர். ஆனால், அதே தினம் தான் திரையுலகில் பல ஆண்டுகளாக கோலோச்சி வரும் நடிகர்கள் சேரன், அசோக் உள்ளிட்ட பல பிரபலங்களின் பிறந்த நாள் என்பது பலரும் அறியாதது.
அந்த வகையில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணிக்கும் பழம் பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கும் இன்று தான் பிறந்த நாள். சவுகார் ஜானகி இந்தாண்டு 90வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். சங்கரமன்சி ஜானகி இவரது நிஜப்பெயர். ஷாவகாரு என்ற தெலுங்கு படத்தில் நடித்ததால், சவுகார் ஜானகி ஆனார்.அண்ணி மஞ்சி சகுணமுலே என்ற தெலுங்கு படத்தில் ராஜேந்திர பிரசாத்துக்கு அத்தையாக தற்போது நடித்து வருகிறார்.
இப்பாத்திரத்தில் சவுகார் ஜானகி தான் பொருத்தமானவர் என தேடிப்பிடித்து, அவரை நடிக்க வைத்துள்ளனர். இப்படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், தினசரி இரண்டு மணி நேரம் மட்டுமே சவுகார் ஜானகி படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.
கடந்த 1950ல் எல்.வி.பிரசாத் இயக்கிய ஷாவகாரு படத்தில் ஜானகி அறிமுகமானார். திரையுலகில் 70 ஆண்டுகளாக பயணிக்கும் சவுகார் ஜானகி, தமிழில் கார்த்தி நடித்த தம்பி மற்றும் சந்தானத்துடன் பிஸ்கோத் போன்ற படங்களில் நடித்தார். எந்த மொழியானாலும் நல்ல வாய்ப்புகளை தவறவிடாத சவுகார்ஜானகி, கலைக்கு வயது தடையில்லை என்பதை இப்போதும் நிருபித்து வருகிறார்.
கடந்து வந்த ஆச்சர்யங்கள்
குணசுந்தரி கதா என்ற தெலுங்கு படத்தில் வாய்ப்பு கிடைத்தும், பெற்றோருக்கு பிடிக்காததால், உறவுக்காரரான சங்கரமராஞ்சி சீனிவாசராவ் என்பவரை 1947ல் திருமணம் செய்து கொண்டார். கணவர் வீட்டு மாப்பிள்ளையாக இருந்ததால், உறவினர் ஒருவர் சினிமாவில் நடிப்பதை அறிந்து தானும், சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்தார். கடந்த 1948ல் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜானகிக்கு வந்தது. ஆனால், அந்நேரம் கர்ப்பமாக இருந்ததால், படத்தின் வாய்ப்பு பறி போனது. பின், கணவரின் அனுமதியுடன் பி.என்.ரெட்டியின் சிபாரிசில், 19வது வயதில் ஷாவகாரு படத்தில் என்.டி.ராமராவுக்கு ஜோடியாக நடித்தார்.
இப்படத்தின் ஒத்திகைக்கு சவுகார் ஜானகி, கணவர், குழந்தையுடன் சென்றார்.பொதுவாக தமிழ் திரையுலகில் திருமணமாகிவிட்டால் அவரை அம்மா, அக்கா வேடத்திற்கு தான் அழைப்பர். அதிலும், குழந்தை பெற்ற நிலையில் என்றால் கேட்கவா வேண்டும். ஆனால் அன்றே ஒரு குடும்ப பெண்மணியாக இருந்து, சினிமாவில் சவுகார் ஜானகி சாதித்தது சாதாரண விஷயமல்ல. இன்றைக்கு நயன்தாரா, சமந்தா பற்றி எல்லாம் பேசுவது பெரிய விஷயமில்லை என்றால் மிகையல்ல.
கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள சவுகார் ஜானகி, வாலி எழுதிய 'காந்தி கிராமம்' நாடகத்தில் நாயகியாக நடித்தார். இந்த நாடகம் கடைசி வரை மேடை ஏறவில்லை. சவுகார் ஜானகிக்கு உடல்நிலை பாதித்ததால் மேடையேறாமல் நாடகம் நிறுத்தப்பட்டது. இந்நாடகத்தை பலரும் படமாக எடுக்க முன் வந்தனர். பல சிரமங்களை கடந்து இப்படம், லட்சுமி நாயகியாக நடிக்க, ஒரே ஒரு கிராமத்திலே என்ற பெயரில் வெளியானது. இப்படம் ஜனாதிபதி விருதையும் பெற்றது. அப்போது விருதுக்கு படங்களை தேர்வு செய்யும் குழுவில் சவுகார் ஜானகியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுகார் ஜானகிக்கு ஒரு மகன், இரண்டு மகள். ஒரு மகள் படித்த சர்ச் பார்க் பள்ளியில் தான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சீனியராக இருந்துள்ளார். படிப்பில் கெட்டிக்காரரான ஜெயலலிதா, கலெக்டராக வருவார் என்றே சவுகார் ஜானகி நினைத்தாராம். அவர் சினிமாவுக்கு வந்து, அரசியலுக்கும் வந்து, கலெக்டர்களுக்கெல்லாம் உத்தரவு போடும் நிலைக்கு உயர்ந்தது சவுகார் ஜானகி வியந்த விஷயங்களில் ஒன்று.
பன்மொழியிலும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு, நடிப்பை தவிர சமையல், தோட்டக்கலையும் அத்துப்படி. இன்று சவுகார் ஜானகியின் 90வது பிறந்த நாளை கொண்டாட, அவரது மூத்த மகள் யக்ன பிரபா சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்.இன்னும் பல்லாண்டுகள் அவர் நலமுடன் வாழவும், திரையுலகில் சாதிக்கவும் நாமும் வாழ்த்தலாம்!
- நமது நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE