புதுடில்லி: ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலுக்கு நம் நாட்டை ஒரு மையமாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் 37 ஆயிரம் சதவீதம் உயர்ந்துள்ளதாக, டி.ஆர்.ஐ., எனப்படும் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலம் முந்தரா துறைமுகத்தில் செப்டம்பர் மாதத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. வருவாய் புலனாய்வு இயக்குனரகம் மேற்கொண்ட சோதனையில் இது கண்டுபிடிக்கப் பட்டது.
பறிமுதல்
வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக உளவு தகவல்களை சேகரித்து, நடவடிக்கை எடுக்கும் பணியில் இந்த துறை ஈடுபட்டுள்ளது.அதே நேரத்தில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான விவகாரத்தை என்.சி.பி., எனப்படும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியம் கவனிக்கிறது. இதைத் தவிர மாநில அரசுகளும் போதைப் பொருள்கள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.நம் நாட்டில் கடத்தல் போதைப் பொருள் பறிமுதல் செய்வது திடீரென அதிகரித்துள்ளது, அதிகாரி கள் இடையே அதிர்ச்சியை யும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கூறியுள்ளதாவது:வருவாய் புலனாய்வு இயக்குனரகம் வாயிலாக 2018ம் ஆண்டில் 9 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டில் 9.16 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்த 2020ம் ஆண்டில் திடீரென 202 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் 3,000 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37,400 சதவீதம் உயர்வு.
நான்கு ஆண்டுகளில் நம் நாட்டில் இந்த அளவுக்கு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. போதைப் பொருள் கடத்தலுக்கு நம் நாட்டை ஒரு மையமாக கடத்தல்காரர்கள் பயன்படுத்து கின்றனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பயிரிடுவது அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம்.
கணிப்பு
ஐ.நா.,வின் போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவல கம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி ஆப்கானிஸ்தானில் போதைப் பொருள் பயிரிடுவது 37 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான், ஈராக் போன்ற நாடுகள் வழியாக போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வந்தன. அந்த நாடுகளில் தற் போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், கடத்தல்காரர்கள் மாற்று வழியை தேடத் துவங்கினர். ஈரான், ஈராக்குடனான நட்பு காரணமாக, தங்கள் நாட்டைப் பயன்படுத்துவதற்கு பாக்., அனுமதிக்கவில்லை.

அதனால் நம் நாட்டைப் பயன்படுத்த துவங்கியுள்ளனர். முன்பெல்லாம், 1 கிலோ, 2 கிலோ என்ற அளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டன. ஆனால் தற்போது ஆயிரக்கணக்கான கிலோ கணக்கில் கடத்துகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் விமான போக்குவரத்து தடைபட்டது. அதனால் கப்பல்கள் மூலம் போதைப் பொருள் கடத்துவதை துவக்கினர். அனுப்புபவர் பெயர், வாங்குபவர் பெயர் என எதையும் குறிப்பிடத் தேவையில்லாததால், கடத்தல்காரர்கள் இந்த வழியை விரும்புகின்றனர்.மிக நீண்ட கடல்பகுதி உள்ளதால் இந்தியா வழியாக கடத்துவதே லாபமானது, பிரச்னையில்லாதது என்பது கடத்தல்காரர்களின் கணிப்பு.அதனால் தான் நம் நாட்டின் வழியாக போதைப் பொருள் கடத்துவது அதிகரித்துள்ளது.
சாதாரணமாக எந்தக் குற்றத்திலும் புழக்கத்தில் உள்ளதில் இருந்து 10 சதவீதம் மட்டுமே போலீஸ் உள்ளிட்ட துறைகளிடம் சிக்கும். அதன்படி பார்த்தால் நம் நாட்டின் வழியாக பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் நடந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE