புதுடில்லி: சீன நிறுவனத்துடன் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வுமையம் செய்துள்ள ஒப்பந்தத்துக்கு சமூக வலைதளங்களில் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியா - சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் நம்வீரர்கள் 20 பேர் உயிர் தியாகம் செய்தனர். இதற்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 43 சீனர்கள் இறந்தனர். இதன்பின், லடாக் எல்லையில் தற்போது வரை முழு அமைதி திரும்பவில்லை.
இந்த தாக்குதலுக்கு பின், 'சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்' என்ற கோஷம் நாட்டில் அதிகரித்தது. சீனாவின் பல்வேறு செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில் சீனாவின் மிகப் பெரிய மின்னணு நிறுவனமான 'ஒப்போ' வின் துணை நிறுவனமான 'ஒப்போ இந்தியா'வுடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் பற்றி இஸ்ரோ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் சீன நிறுவனத்துடன் இஸ்ரோ செய்துள்ள ஒப்பந்தத்துக்கு சமூக வலைதளங்கள் வழியாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிவசேனாவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ''ஒரு பக்கம் சீனாவுடன் எல்லையில் நாம் மல்லுக்கட்டி நிற்கிறோம். சீன பொருட்களை புறக்கணிக்க கோருகிறோம். ஆனால் மறுபுறம் சீன நிறுவனத்துடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது,'' என்றார்.
காங்., செய்தி தொடர்பாளர் டாக்டர் ஷாமா முகமது கூறுகையில், ''நம் எல்லையை சீனா ஆக்கிரமிக்க தொடர்ந்து முயற்சிக்கிறது. ஆனால் சீன நிறுவனத்துடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது; இது பெரும் அதிர்ச்சியளிக்கிறது,'' என்றார்.