புதுடில்லி: இந்தியாவில் ஆந்திரா, சண்டிகர் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
மரபணு மாறிய 'ஒமைக்ரான்' வகை வைரசால், இந்தியாவில் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதுவரை டில்லி, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, டில்லி ஆகிய மாநிலங்களில் இந்த வகை வைரஸ் பரவி உள்ளது.
இந்நிலையில், சண்டிகர் யூனியன் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த நவ.,22ம் தேதி இத்தாலியில் இருந்து வந்த 20 வயதான நபருக்கு கோவிட் உறுதியானது. டிச.,1ல் அவர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை இரண்டு டோஸ் செலுத்தி இருந்தார். இன்று நடந்த பரிசோதனையில் அவருக்கு மீண்டும் கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: அயர்லாந்தில் இருந்து மும்பை வந்த 34 வயதான வெளிநாட்டு பயணிக்கு மும்பை விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கோவிட் இல்லை என தெரியவந்ததால், அவர் நவ.,27ல் விசாகப்பட்டினம் செல்ல அனுமதிக்கப்பட்டார். விசாகப்பட்டினத்தில் நடந்த பரிசோதனையில் அவர் கோவிட்டால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அவர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டது தெரியவந்ததால், தனிமைபடுத்தப்பட்டார். நேற்று (டிச.,11) நடந்த ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் அவருக்கு பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.
மாநிலத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர் வேறு எவரும் இல்லை. பொது மக்கள் கவலைப்பட தேவையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் பான்ற நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றப்படவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 2 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 37 ஆக அதிகரித்துள்ளது.