ஜெய்ப்பூர்:''இந்தியா ஹிந்துக்களின் நாடு; ஹிந்துத்வவாதிகளின் நாடு அல்ல,'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறினார்
.ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடந்து பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:நம் நாட்டின் அரசியலில் இன்று ஹிந்து மற்றும் ஹிந்துத்வவாதி என்ற இரண்டு உலகங்களுக்கு இடையே போட்டி உள்ளது.
நான் ஹிந்து. ஆனால் ஹிந்துத்வவாதி இல்லை. மஹாத்மா காந்தி ஹிந்து. ஆனால் கோட்சே ஹிந்துத்வவாதி. இந்தியா ஹிந்துக்களின் நாடு; ஹிந்துத்வவாதிகளின் நாடல்ல. ஹிந்துத்வவாதிகள் தங்கள் வாழ்க்கை முழுதும் அதிகாரத்தை தேடுவதிலேயே குறியாக உள்ளனர். அவர்களுக்கு அதிகாரத்தை தவிர வேறு ஒன்றும் தேவையில்லை. அவர்கள் சத்தியாகிரக பாதையை பின்பற்ற மாட்டார்கள்.
அவர்கள் தான் 2014 முதல் அதிகாரத்தில் உள்ளனர். அவர்களை அதிகாரத்தில் இருந்து அகற்றிவிட்டு ஹிந்துக்களை அமர வைக்க வேண்டும். ஹிந்து என்பவர் யார்? அனைவரையும் அரவணைத்து யாருக்கும் பயப்படாமல் அனைத்து மதங்களையும் மதித்து யார் நடக்கிறாரோ அவரே ஹிந்து. ஹிந்துத்வவாதிகளால் பணவீக்கம் உயர்ந்துள்ளது. அதனால் அனைவரும் அவதிப்படுகின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளாக பிரதமர் மோடியும், அவரது நண்பர்களும் சேர்ந்து நாட்டை சீரழித்து வருகின்றனர். இவ்வாறு ராகுல் பேசினார்.
காங்., பொதுச் செயலர் பிரியங்கா பேசுகையில், ''நாட்டில் கடந்த 70 ஆண்டு களாக காங்கிரஸ் கட்டமைத்த அனைத்தையும் தொழிலதிபர்களிடம் விற்க பா.ஜ., முயற்சிக்கிறது. ''மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு உழைக்கவில்லை. குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காக மட்டுமே உழைக்கிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE