பள்ளிச் சான்றிதழில் இனிஷியல் மாறினால் பிரச்னை: கோமாளித்தனமான உத்தரவு என வழக்கறிஞர் சாடல்| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

பள்ளிச் சான்றிதழில் 'இனிஷியல்' மாறினால் பிரச்னை: 'கோமாளித்தனமான உத்தரவு' என வழக்கறிஞர் சாடல்

Added : டிச 12, 2021 | கருத்துகள் (24) | |
பள்ளிகளில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் எல்லா சான்றிதழ்களிலும், 'இனிஷியல்' எனப்படும் பெயரின் முதல் எழுத்து, தமிழ் எழுத்தாக தான் இருக்க வேண்டும் என தமிழக அரசு புது உத்தரவு போட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அலெக்ஸ், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:ஹிந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி வந்த தி.மு.க., அரசு, தற்போது தனி மனித உரிமைகளில்
பள்ளிச் சான்றிதழில் 'இனிஷியல்' மாறினால் பிரச்னை: 'கோமாளித்தனமான உத்தரவு' என வழக்கறிஞர் சாடல்

பள்ளிகளில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் எல்லா சான்றிதழ்களிலும், 'இனிஷியல்' எனப்படும் பெயரின் முதல் எழுத்து, தமிழ் எழுத்தாக தான் இருக்க வேண்டும் என தமிழக அரசு புது உத்தரவு போட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அலெக்ஸ், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
ஹிந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி வந்த தி.மு.க., அரசு, தற்போது தனி மனித உரிமைகளில் தலையிடுகிறது. தமிழ் மொழியை காப்பாற்றுவதாக நினைத்து, பல கோமாளித்தனமான செயல்களை செய்கிறது.


நிர்ப்பந்தம்


சமீபத்தில், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மகேசன் காசிராஜன் ஓர் உத்தரவு போட்டுள்ளார். அதில், 'தமிழக அரசின் முதல்வர் முதல், கடை நிலை ஊழியர்கள் வரை, தங்கள் பெயரின் முன்னெழுத்தை தமிழில் தான் எழுத வேண்டும்' என, கூறியுள்ளார்.அரசாணை மற்றும் உத்தரவை, அரசு ஊழியர்கள் செயல்படுத்தி தான் ஆக வேண்டும். அது அவர்களுக்கான நிர்ப்பந்தம்.
ஆனால், அதே உத்தரவில், 'தமிழக பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விண்ணப்பத்தில் துவங்கி, அவர்கள் பள்ளியை விட்டு செல்லும் போது தரப்படும் மாற்று சான்றிதழ் வரை, அனைத்திலும் பெயரின் முன்னெழுத்தை தமிழில் தான் எழுத வேண்டும்' என குறிப்பிட்டு உள்ளனர். இது தொடர்பான விழிப்புணர்வையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனவும், அந்த ஆணையில் உள்ளது.
அதோடு, 'மாணவர்கள், தாங்கள் கையெழுத்து போடும் இடங்களிலும், பெயரின் முன்னெழுத்தை தமிழிலேயே போடுவதற்கும் பழக்கப்படுத்த வேண்டும்' எனவும் கூறியுள்ளனர். இது என்ன மாதிரியான அணுகுமுறை என்றே புரியவில்லை. ஏற்கனவே, 'அரசு ஊழியர்கள், அரசு ஆவணங்கள், உத்தரவுகள் அனைத்திலும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும்' என, உத்தரவிட்டு இருந்தனர். இன்றளவிலும், எந்த ஊழியரும், அதிகாரியும் அதை முழுமையாக பின்பற்றவில்லை.
தற்போதைய ஆணையிலும், அது பற்றி குறிப்பிட்டிருக்கும் அரசு, 'அந்த நடைமுறையை பின்பற்றாதவர்கள், உடனடியாக பின்பற்ற வேண்டும்' என கூறப்பட்டுஉள்ளது.


முரண்பாடு


இந்த அரசாணை, பிரத்யேகமாக மாணவர்களுக்கானது என்றே வைத்துக் கொண்டாலும், அவர்கள் சார்ந்த மற்ற ஆவணங்களில், தங்கள் பெயருக்கு முன், 'இனிஷியல்' ஆக ஆங்கில எழுத்தை பயன்படுத்தி இருந்தால், நடைமுறையில் குழப்பம் வராதா?
குறிப்பாக, ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவையில் முன்னெழுத்து, ஆங்கில எழுத்தாக இருந்து, பள்ளி ஆவணங்களில் முன்னெழுத்து தமிழ் எழுத்தாக இருந்தால், முரண்பாடு ஏற்படாதா?வங்கி கணக்கு உள்ளிட்ட பல விஷயங்களில், இனிஷியல் குழப்பம் ஏற்பட்டால், அதை யார் தீர்ப்பர்?
அரசாணயில் குறிப்பிடுவது போலவே செயல்படுவதாக வைத்துக் கொள்வோம். ஒருவர் பெயர் ஸ்டாலின். அவரது மகன், அரசு உத்தரவுப்படி இனிமேல் தன் பெயருக்கு முன்னெழுத்தாக இன்ஷியலை எப்படி குறிப்பிடுவார்? 'ஸ்' என்பது தமிழ் எழுத்து இல்லை என்பதால், அதற்கு ஈடாக அவர் 'சு'வைத் தான் குறிப்பிட்டாக வேண்டும். அப்படியென்றால் ஸ்டாலின், சுடாலின் ஆகி விட மாட்டாரா?
அதேபோல, சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும், தமிழ் எழுத்துக்களை முன்னெழுத்தாக கொண்டு பெயர் வைப்பதில்லை. உதாரணத்துக்கு ஜவாஹிருல்லாஹ்வை எடுத்துக் கொள்வோம். குழப்பம்அவரது மகன், தன் இனிஷியல் 'ஜ'வுக்கு பதிலாக 'ச'வைத் தான் குறிப்பிட வேண்டுமா?இது தவறு என குறிப்பிட்டால், 'இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, மொழி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாநில அரசு, இப்படிப்பட்ட உத்தரவுகளை போட அதிகாரம் இருக்கிறது' என்று கூறுவர்.
ஆனால், நடைமுறையில் இந்த உத்தரவு, சான்று மற்றும் ஆவணங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும். பல உத்தரவுகளை போல, இந்த உத்தரவையும், அரசு தரப்பில் பத்தோடு பதினொன்றாக கிடப்பில் போட்டு விட்டால் பரவாயில்லை. 'கட்டாயம் நடைமுறைக்கு கொண்டு வருவோம்' என்று கூறினால், பிரச்னை தான் ஏற்படும்.இவ்வாறு அலெக்ஸ் கூறினார்.
- நமது நிருபர் - -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X