பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: வன்னியர் சங்கமும், பா.ம.க.,வும்., வன்னியர்கள் நலனுக்காக மட்டும் போராடவில்லை; தமிழகத்திலுள்ள அனைத்து ஜாதியினருக்காகவும் போராடியது. அதன் பலனால் பெற்ற இட ஒதுக்கீட்டால், பல ஜாதியினர் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறியுள்ளனர்.
நீங்கள் சொல்வது புது, 'ஐட்டமாக' இருக்கிறதே... வன்னியர் உள்ஒதுக்கீடு பிரச்னையால் பிற ஜாதியினரின் கோபத்திலிருந்து தப்பிக்க இப்படி மாற்றி கூறுகிறீர்களோ?
தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகி எச்.ராஜா பேட்டி: சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆட்களுக்கு பணம் கொடுத்து அரசு திரட்டலாம்; கொரோனா வராது... ஆனால், சிதம்பரத்தில் தேரோட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. திருச்செந்துார், திருவண்ணாமலை, சிதம்பரம் என்று அனைத்து கோவில்களிலும், ஹிந்துக்களுக்கு வழிபாட்டுரிமை மறுக்கப்படுகிறது.
கொரோனா வந்துள்ளதால், அதன் பெயரை சொல்லி தடுக்கின்றனர். அந்த தொற்று இல்லை என்றால், எதை சொல்லி தடை செய்வரோ என்ற கேள்வி எழுகிறதே?
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: கன்னியாகுமரி, விழுப்புரம் மாவட்டங்களில் அரசு பஸ்களில் நடந்துள்ள, ஏழைகளை இறக்கி விடும் சம்பவங்கள், கவலையை அளிக்கின்றன. பயணியரிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம், அரசு பஸ் ஊழியர்களுக்கு இருக்கும் சமூக பொறுப்பு குறித்து, போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்.
பயிற்சி நடத்தினால் மட்டும் இவர்கள் திருந்தி விடுவரா; சந்தேகம் தான். அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள தொழிற்சங்கங்களை தடை செய்தால், இதுபோன்ற குற்றங்கள் செய்பவர்களுக்கு உதவி செய்ய யாரும் வர மாட்டார்கள்; பயம் வரும்!
இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி: விவசாயத்திற்கு எதிரான மூன்று சட்டங்களை பார்லிமென்டில் அறிமுகம் செய்த போதும், அவற்றை திரும்ப பெற்ற போதும் எவ்வித விவாதத்தையும் நடத்த மத்திய அரசு முன்வரவில்லை. இது, மோடி அரசின் சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது.

விவாதம் நடத்த தயாராக இருந்தால் மட்டும், கம்யூ., - எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபடாமல் அமைதியாக சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்வரா என்ன?
மார்க்சிஸ்ட் கம்யூ., மத்திய குழு உறுப்பினர் சம்பத் பேட்டி: பா.ஜ.,வின், ஏழாண்டு ஆட்சி, சோதனை காலம். இதை முடிவுக்கு கொண்டு வர அடுத்த தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த, அனைத்து எதிரணியில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் வரை ஒற்றுமையாக இருக்க ஏதாவது செய்யப் பாருங்கள். மூட்டையில் அவிழ்த்த நெல்லிக்கனி போல சிதறி விடப் போகின்றனர்!