உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதி லோக்சபா உறுப்பினரான பிரதமர் மோடி அந்த தொகுதியை மேம்படுத்துவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி காசியில் விஸ்வநாதர் ஆலயத்தை புனரமைக்கும் பணி தற்போது நிறைவுக்கு வந்தது. புதிய புனரமைக்கப்பட்ட கோயிலை இன்று (டிச.,13) பிரதமர் மோடி திறந்து வைத்து காசியின் பெருமைகள் குறித்து உரையாற்றினார். இந்தியாவின் புண்ணிய தலமான காசிக்கு அனைவரும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று பிரதமர் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து தற்போது உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மகாத்மா காந்தி குறித்து கருத்து தெரிவித்து சூசகமாக காங்., கட்சியை விமர்சித்துள்ளார். மகாத்மா காந்தி காசி விஸ்வநாதர் ஆலயத்தை உலக அளவில் பிரபலமாக்க விரும்பியதாகத் தெரிவித்தார். காந்தி புனிதமான காசி நகருக்கு வருகை தந்ததாக கூறினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், 'மகாத்மா காந்தி 100 ஆண்டுகளுக்கு முன்பு வாரணாசிக்கு வந்தபோது, குறுகிய தெருக்களையும் அசுத்தங்களையும் கண்டு வேதனை தெரிவித்தார். காந்தியின் பெயரால் பலர் அரசியல் லாபம் கண்டு ஆட்சிக்கு வந்துள்ளனர். ஆனால் அவரது அற்புதமான காசி கனவை நனவாக்கவில்லை. தற்போது பிரதமர் மோடியின் ஆட்சியில் மகாத்மா காந்தியின் கனவு நனவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE