புதுடில்லி :''சட்ட நடைமுறைகளில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக ஹிந்து சமூகத்தினர் வருந்தினர். அதன் விளைவாகவே 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது,'' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் அருண் குமார் கூறினார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இணை பொதுச் செயலர் அருண் குமார் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தது. அதை நடத்தியது, பிற்போக்கு இயக்கம் அல்ல; சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் நேர்மறையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இயங்கி வந்த இயக்கம் அது.
மக்கள் மத்தியிலும் ஓர் எண்ணம் உள்ளது. ஜாதி, மொழி, பிராந்தியம் உள்ளிட்ட காரணங்களால் ஹிந்து சமூகத்தினரால் ஒன்றிணைந்து வர முடியாது என எண்ணுகின்றனர்.
இதேபோல கோழைகளாக ஹிந்துக்கள் இருப்பதாகவும் அவர்கள் நினைக்கின்றனர்.
எனினும் இந்த இயக்கம் அவை அனைத்தையும் பொய்யாக்கிவிட்டது.கடந்த 1992ம் ஆண்டு சட்ட நடைமுறைகளில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக ஹிந்து மக்கள் எண்ணி வருந்தினர். அதன் விளைவாகவே பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
சட்டம் மற்றும் நீதி மீது நம்பிக்கை வைத்து 33 ஆண்டுகள் அமைதியாக ஹிந்து சமூகத்தினர் காத்திருந்தனர். அதன்படி நீதியும் கிடைத்தது. துாய்மையான எண்ணம் இருந்ததால் அது நடந்தது.அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு விடும். எனினும் அடுத்த 25 ஆண்டுகளில் நாம் செய்ய வேண்டியது அதிகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE