புதுடில்லி :உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியத்தை உயர்த்தும் நோக்கில் நீதிபதிகளுக்கான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது. அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் ஆதரவு அளித்தன.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேறியது. இந்நிலையில் இந்த மசோதா ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
கோரிக்கை
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மசோதாவை தாக்கல் செய்து பேசியதாவது:சில வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காக இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளோம். இது, நீதிபதிகளின் ஊதியத்தில் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியத்தை கணிசமாக அதிகரிக்கவே இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.மசோதா மீது விவாதம் நடத்த ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அழைப்புவிடுத்தார்.'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட 12 எம்.பி.,க்கள் விவகாரத்தில் முதலில் முடிவை அறிவிக்கும்படி, காங்., எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்தார். இதற்கு தி.மு.க., உறுப்பினர்கள் சிவா உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் காங்., - எம்.பி., அமீ யாஜ்னிக் பேசுகையில், ''உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.''இதனால் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த காலி இடங்களை நிரப்புவதில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளதா?'' என கேள்வி எழுப்பினார்.தி.மு.க., உறுப்பினர் வில்சன் பேசியதாவது:உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது தற்போது முறையே 62 மற்றும் 65 ஆக உள்ளன. இவற்றை 65 மற்றும் 70 ஆக உயர்த்த வேண்டும். இந்த வயதில் நீதித்துறையில் அவர்கள் பெற்றுள்ள அனுபவம், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க உதவும்.
75 ஆயிரம் வழக்குகள்
உயர் நீதிமன்றங்களில் 57 லட்சம் வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் 75 ஆயிரம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. நீதிபதிகள் நியமனம் போதுமான அளவில் இல்லை. உயர் நீதிமன்றங்களில் 402 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அமெரிக்காவில் நீதிபதிகள் தங்கள் வாழ்நாள் முழுக்க பணியாற்ற சட்டம் இடம் அளிக்கிறது. பிரிட்டனில் நீதிபதிகளின் ஓய்வு வயது 70 ஆக உள்ளது. அதை 75 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.நம் நாட்டில் நீதிபதிகள் ஓய்வு பெற்ற பின்னும் வழக்கறிஞர்களாக பணியாற்றுகின்றனர். மத்தியஸ்தங்களில் ஈடுபடுகின்றனர். ஓய்வூதியத்தை மட்டும் நம்பியே வாழ்கின்றனர். அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை.
உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஒரு மாத சம்பளம், அவர் விசாரிக்கும் வழக்கில் ஆஜராகும் முன்னணி வழக்கறிஞர்களின் ஒரு நாள் கட்டணத்தை விட குறைவு. நீதிபதிகளின் சம்பளத்தை மறுவரையறை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதையடுத்து மசோதா தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரசாரமாக விவாதித்தனர். விவாதத்தின் இறுதியில், அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.''அரசியல் பாரபட்சம் இன்றி மசோதா நிறைவேற ஒத்துழைப்பு அளித்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி,'' என, அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE