சென்னை : தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மீது விமர்சனம் செய்து, 'யு டியூப்'பில், 'வீடியோ' வெளியிட்டு வந்த பா.ஜ., ஆதரவாளர் மாரிதாஸ், மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்தவர் மாரிதாஸ், 40. இவர், தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குறித்து விமர்சனம் செய்து, யு டியூப் சேனல்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். குன்னுார் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக தி.மு.க., ஆட்சி குறித்து, சர்ச்சை கருத்தை சமூக வலைதளமான, டுவிட்டரில் பதிவிட்டார்.
விசாரணை
இது தொடர்பாக, மதுரை தி.மு.க., நிர்வாகி அளித்த புகாரில், சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் சிறையில் அடைக்கப்பட்டார்.இதற்கிடையே, 2020 ஜூலை 10ல், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாரிதாஸ் மீது, தனியார் 'டிவி சேனல்' ஊழியர்கள் புகார் ஒன்றை அளித்தனர்.
அதில், 'எங்கள் நிறுவனத்தின் பெயரை கெடுக்கும் வகையில், மாரிதாஸ் போலியான மின்னஞ்சலை உருவாக்கி மோசடி செய்துள்ளார். 'பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கொச்சைப்படுத்தும் வகையில், அவதுாறான கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும், மாரிதாஸ் தற்போது கைது செய்யப்பட்டு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், தன் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் பதிந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற கிளையில் மாரிதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது இன்று விசாரணை நடக்கிறது
பரபரப்பு
மக்கள் குறைதீர் முகாம் நாளான நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு பேரூரை சேர்ந்த கந்தசாமி, 42, என்பவர் வந்தார். அவர் தன் நெற்றியில், 'மாரிதாஸ் வாழ்க' என எழுதியிருந்தார். மேலும், அவரது கைகளில், 'தி.மு.க., சிற்றரசு ஒழிக' என்பது உட்பட பல்வேறு வாசகங்களை எழுதியிருந்தார்.
கந்தசாமி கூறுகையில், ''மாரிதாஸ் எப்போதும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பேசுவார். அவரை விடுதலை செய்ய வேண்டும்,'' என்றார். போலீசார், அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE