திருவனந்தபுரம் :துணைவேந்தர் நியமனம் தொடர்பான விஷயத்தில் கேரள மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே ஏற்பட்டுஉள்ள மோதல், அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
நடவடிக்கை
இங்குள்ள கண்ணுார் பல்கலையின் துணைவேந்தராக, பேராசிரியர் கோபிநாத் ரவீந்திரனை மாநில அரசு மீண்டும் நியமித்தது. மேலும், பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேறியது. இது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள கவர்னரின் அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கை என விமர்சிக்கப்படுகிறது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் பினராயி விஜயனுக்கு கேரள கவர்னர் ஆரீப் முகமது கான் கடிதம் எழுதினார்.
அதில், பல்கலைகளின் வேந்தராக முதல்வரே பதவி வகிக்க அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் கொண்டு வந்தால் அதில் கையெழுத்திட தயாராக இருப்பதாக கவர்னர் தெரிவித்தார். இது கேரள அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் கன்னம் ராஜேந்திரன் கூறியதாவது:கவர்னர் பதவி என்பதே தேவையற்ற ஆடம்பரம் என கருதுகிறோம். அந்த பதவி வகிப்பவர்களிடம் இருந்து இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே எதிர்பார்த்தது தான்.கவர்னர் - மாநில அரசு இடையிலான தகவல் பரிமாற்றத்தில் உள்ள ரகசியம் காக்கப்பட வேண்டும். அதை கவர்னர் மீறுகிறார். மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் வாயிலாகவே பல்கலைகளின் வேந்தராக கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அழுத்தம்
இதை எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெறும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. அது போன்ற நடவடிக்கையில் அரசு ஈடுபட அழுத்தம் கொடுக்காதீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.கேரளா மாநில பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய இணை அமைச்சருமான முரளீதரன் கூறுகையில், ''கவர்னர் அதிகாரத்தில் வரம்பு மீறி தலையிட்டதற்காக, முதல்வர் பினராயி விஜயன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE