நீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில், டிசம்பர் 8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தின் போது, மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்காக, வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட சென்டர் மற்றும் நஞ்சப்பா சத்திரம் ஆகிய இடங்களில் நேற்று நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தென் பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அருண் தலைமை வகித்து, பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பேசியதாவது:ஹெலிகாப்டர் விபத்தின்போது மீட்புக்காக உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் நான் படித்துள்ளேன். அர்ப்பணிப்பு கொண்ட நீலகிரி மக்கள் மத்தியில், சீருடை அணிந்து சேவை செய்வதில் பெருமைப்படு கிறோம். உதவி செய்பவர்கள் கடவுள் போன்றவர்கள். நம் நாட்டில் இதுபோன்ற கிராமம் இருப்பது நமக்கு பெருமை. விபத்தில் சிக்கிய ஒருவர் நம்மிடையே உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம். உடனடியாக, தண்ணீர், போர்வை, கம்பளி, முதலுதவி பொருட்கள் வழங்கி உதவியதற்கு எத்தனை நன்றி சொன்னாலும் தீராது.

இந்த கிராமத்தை அடுத்த ஆண்டு டிசம்பர் 8 வரை தத்தெடுக்கிறோம். மாதந்தோறும் டாக்டர், நர்ஸ் இந்த கிராமத்துக்கு வந்து மருத்துவ முகாம் நடத்துவர். இங்குள்ள, 60 குடும்பங்களை சேர்ந்த மக்கள், ராணுவ மருத்துவமனையில் இலவச பரிசோதனை செய்து கொள்ளலாம். இங்குள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம்.மீட்புப் பணியில் ஈடுபட்ட தமிழக காவல் துறை, தீயணைப்பு படையினர், மருத்துவக்குழு, மின் வாரியம், வெலிங்டன் ராணுவ மருத்துவமனை, வெலிங்டன் ராணுவ மையம்; வெலிங்டன் ராணுவ கல்லுாரியில் உள்ள அனைவருக்கும் நன்றி. முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கும் நன்றி. இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், 'உங்களது வேலைக்கு எங்கள் அங்கீகாரம்' என்ற ராணுவத்தின் பதக்கம், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் ராஜேஷ்வர் சிங், நீலகிரி கலெக்டர் அம்ரித், நீலகிரி எஸ்.பி., ஆசிஷ் ராவத் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.தீயணைப்பு அதிகாரி, மருத்துவ குழுவினர், ராணுவ மருத்துவ குழுவினர் உட்பட பலருக்கும் நன்றி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. விபத்து ஏற்பட்ட இடத்தை ராணுவ அதிகாரிகள் பார்வையிட்ட பின், மக்களுக்கு போர்வைகள், சோலார் எமர்ஜென்சி விளக்குகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
மூன்று மொழியில் பேசிய ஜெனரல்

வெலிங்டன் நாகேஷ் சதுக்கம், நஞ்சப்பா சத்திரம் பகுதிகளில் நடந்த நன்றி நிகழ்ச்சிகளில், தென் பிராந்திய ராணுவ தளபதி அருண், ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் முன்பு ஹிந்தியிலும், மருத்துவ குழுவினர் மற்றும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் முன் ஆங்கிலத்திலும், பொது மக்கள் முன் தமிழிலும் பேசி அசத்தினர்.
தீவிர சிகிச்சையில் வருண் சிங்!
லெப்.ஜெனரல், அருண் நிரபர்களிடம் கூறுகையில்,'' இதுபோன்ற விபத்து எதிர்பார்க்காதது. விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்தாலும், நவீன மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தீவிர சிகிச்சையில், வருண் சிங் உள்ளார். காட்டேரி பகுதியில், நினைவு தூண் அமைப்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். முறையாக செய்திகளை வழங்கிய அனைத்து செய்தி நிறுவனங்களுக்கும் நன்றி,'' என்றார்.
ரூ.5,000 ரொக்கம்

நஞ்சப்பாசத்திரத்தில் விபத்து நடந்த போது, கிருஷ்ணசாமி, சந்திரகுமார் ஆகியோர் விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறை, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இவர்களை பாராட்டிய தளபதி அருண், தலா 5,000 ரூபாய் ரொக்கம் வழங்கினார். பின், அவர்களிடம் சம்பளம் குறித்து கேட்டறிந்து, பாராட்டு தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE