பிஸினஸ்ல உளவு போலீஸ் பிஸி: பிராடு வேலைக்கு உயரதிகாரி ஆசி | Dinamalar

'பிஸினஸ்ல' உளவு போலீஸ் பிஸி: 'பிராடு' வேலைக்கு உயரதிகாரி 'ஆசி'

Updated : டிச 14, 2021 | Added : டிச 14, 2021 | |
வீட்டில் அழைப்பு மணியின் சத்தம் கேட்டு, கதவை திறந்தாள் சித்ரா. ''ஹாய் சித்துாக்கா எப்படி இருக்கீங்க…'' விசாரித்தபடியே வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.''இப்பதான்டி உன்ன நினைச்சேன்; கண்முன்னாடி நிக்கற. உனக்கு நுாறு வயசுடி,'' என, சிரித்தாள் சித்ரா.''அது கெடக்கட்டுங்க்கா... பல்லடம் பக்கத்துல 'பேட்டை' போலீஸ் ஸ்டேஷன்ல இருக்க, ஒற்றர் படையின் ஆபீசர் ஒருத்தரு,
 'பிஸினஸ்ல' உளவு போலீஸ் பிஸி: 'பிராடு' வேலைக்கு உயரதிகாரி 'ஆசி'

வீட்டில் அழைப்பு மணியின் சத்தம் கேட்டு, கதவை திறந்தாள் சித்ரா.

''ஹாய் சித்துாக்கா எப்படி இருக்கீங்க…'' விசாரித்தபடியே வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.

''இப்பதான்டி உன்ன நினைச்சேன்; கண்முன்னாடி நிக்கற. உனக்கு நுாறு வயசுடி,'' என, சிரித்தாள் சித்ரா.

''அது கெடக்கட்டுங்க்கா... பல்லடம் பக்கத்துல 'பேட்டை' போலீஸ் ஸ்டேஷன்ல இருக்க, ஒற்றர் படையின் ஆபீசர் ஒருத்தரு, பெட்ரோல் பங்க், கம்பெனியெல்லாம் நடத்துறாராம். பிசினஸ், ஜோரா போய்ட்டு இருக்கறதால, கவர்மென்ட் சம்பளத்த பத்தி கவலைப்படறது இல்லையாம்,'' என்றாள்.

''எல்லாத்துக்கும் பிசினஸ் 'செட்' ஆகாதுங்க்கா. அதுக்கும் ஒரு ராசி வேணும்,'' என தொடர்ந்து மித்ரா பேச ''கரெக்ட் தான் மித்து, நாளைக்கு சூலுார் போறேன்னு சொன்னயே. கண்டிப்பா, 'மனோ' அண்ணாவை கேட்டதாக சொல்லு'' என்றாள் சித்ரா.

''அக்கா, அதே ஊர்ல, கை நீட்டிய ஆர்.ஐ., ஒருத்தரு, லஞ்ச ஒழிப்பு போலீசிடம் மாட்டிட்டா ருல்ல. இன்னும் ஒரு வாரத்துல 'டிரான்ஸ்பர்' ஆக வேண்டியவரு, பேராசைப்பட்டு சிக்கிட்டாரு. இருக்கறத வச்சு வாழ்ந்தா போதுங்கறது பலருக்கு புரியவே மாட்டேங்குது,'' என ஆதங்கப்பட்டாள் மித்ரா.'கவனிப்போ'ருக்கு முதல் வரிசை'ரிமோட்'டை எடுத்து, டிவி.,யை ஆன் செய்தாள் மித்ரா. சிக்னல் இல்லாமல் இருந்தது.

''மித்து, இப்படிதான்டி அடிக்கடி கேபிள் 'கட்' ஆகுது மித்து. அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் மூலமாதான், சாட்டிலைட், லோக்கல் சேனல் ஒளிபரப்பாகுது. திருப்பூர்ல மட்டும், 26 சேனல் இருக்காம். வரிசை பிரகாரம் இணைப்பு கொடுத்திருக்காங்க,''

''இதுல என்ன விசேஷம்ன்னா, சம்மந்தப்பட்ட அதிகாரிகள தனிப்பட்ட முறையில 'கவனிக்கிற' சேனல்காரங்களோடு சேனலை, முதல்ல வர்ற மாதிரி பண்ணிட றாங்களாம். 'கவனிக்காத' சேனல்களை திட்டமிட்டே பின்னுக்கு தள்ளிடறாங்கன்னு பேசிக்கிறாங்க. 'கவனிப்பு' கரெக்டா இல்லாட்டி, சில சேனல்களோட இணைப்பை அப்பப்போ துண்டிச்சும் விட்டுடறாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''இப்படி பண்ணா என்னதாங்க்கா பண்றது'' என, ஆதங்கப்பட்ட மித்ரா, ''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஆளுங்கட்சி வார்டு கிளை அலுவலகத்தில், மூனு நம்பர் லாட்டரி விற்பனை செஞ்ச ஆட்களை பிடிச்சாங்கல்ல. அந்த வார்டு, கிளை செயலாளரு, ஆளுங்கட்சி பிரமுகரின் நெருங்கிய சொந்தமுன்னு தெரிஞ்சும், கட்சி அலுவலகத்தில் புகுந்து நடவடிக்கை எடுத்த போலீஸ்காரங்களுக்கு பாராட்டு குவியுது,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.'

'அடடே, நல்ல விஷயம் தானே, மித்து''

''ஆமாங்க்கா. இதுக்கு அப்புறமா, லாட்டரி சேல்ஸ் கொஞ்சம் 'கன்ட்ரோல்' ஆகியிருக்காம். வெளியூர்ல இருந்து வந்து, ஆளுங்கட்சிக்காரங்க ஆசியோட இந்த 'பிசினஸ்ல' ஈடுபட்டவங்க, முகாம்களை காலி செஞ்சுட்டாங்களாம். இந்த பரபரப்பு கொஞ்சம் ஓய்ஞ்சதுக்கு அப்புறம், திரும்பி வர்றலாம்ன்னு இருக்காங்களாம்''நான் அவனில்லை...கேபிளில் இணைப்பு வரவே, டிவி.,யில், வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடும் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.

''எலக்ஷன் தள்ளிபோகும்ன்னு சொல்றாங்க. உண்மையா அக்கா,'' என, அரசியல் மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

''ஆமா மித்து. அப்படித்தான் பேசிக்கிறாங்க. ஆனா, கட்சிக்காரங்க படுபிஸியா 'எலக்ஷன்' வேல பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. கார்ப்பரேஷன்ல, 17வது வார்டு கவுன்சிலரா இருந்த ஆளுங்கட்சியை சேர்ந்தவரு, இந்த முறை, 19வது வார்டில 'சீட்' கேட்டிருக்காரு. அங்க வேற ஒருத்தருக்கு 'சீட்' உறுதியானதா தகவல் வர, ஆளுங்கட்சியில ஐக்கியமாக்கிட்டாரு''

''போனமுறை, போயம்பாளையத்துல சுயேச்சையா ஜெயிச்சு, இலை கட்சியில் ஐக்கியமான ஒருத்தரையும், பிச்சம்பாளையத்துல ஜெயிச்சு, இலை கட்சியில ஐக்கியமான தோழர் ஒருத்தரையும், ஆளுங்கட்சி பக்கம் இழுக்க அவர் 'டிரை' பண்ணியிருக்காரு; எலக்ஷன்ல சீட்டும், செலவுக்கு பணமும் அவங்க கேட்க, 'டீல்' ஒத்துவரலையாம்,''

''இந்த விவகாரம், அவங்கவங்க கட்சி தலைமைக்கு தெரியவர, மிரண்டு போன ரெண்டு பேரும், 'நாங்க கட்சியெல்லாம் மாறல; அதுக்கு முயற்சியும் பண்ணலைன்னு சமாளிச்சுட்டாங்களாம். அதை நிரூபிக்க, அவங்கங்க வார்டில் இருக்க அடிப்படை பிரச்னைகளை பட்டியலிட்டு, மனு கொடுக்கும் போராட்டத்தையும் நடத்தினாங்களாம்,'' என்ற மித்ரா, ''ஆளுங்கட்சியில அவங்கள சேர்க்க 'பால'மா இருந்தவருதான் கொஞ்சம் 'அப்செட்' ஆகிட்டாராம்,'' என்றாள்.

பணம் கொட்டுது...''வீட்டு டாக்குமென்ட் வச்சு, பேங்க் லோன் அப்ளை பண்ணனும்; அதுக்கு சொத்து மதிப்பு சான்றிதழ் வாங்கணும் மித்து,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.

''ரெவின்யூ டிபார்ட்மென்ட்கிட்ட இருந்து தான் சொத்து மதிப்பு சான்றிழ் வாங்கணும். வி.ஏ.ஓ., மூலமா விண்ணப்பிக்கும் போது, அவங்க நிறைய காசு வாங்கறான்னு புகார் கிளம்பினதால, தாசில்தார்ங்க மட்டும் தான் சான்றிதழ் தரணும்ன்னு, பழைய கலெக்டர் உத்தரவு போட்டிருந்தாரு''

''ஆனா, தாலுகா ஆபீஸ்ல இருக்க புரோக்கர்ஸ், அஞ்சாயிரம் வாங்கிட்டு, வி.ஏ.ஓ.,ங்க கிட்ட இருந்து, 'மேனுவல் சர்டிபிகேட்' வாங்கி கொடுத்துடறாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''ஆன்லைன் சர்டிபிகேட் இருந்தாதான், லோன் கொடுப்போம்ன்னு, பேங்க்காரங்க சொல்லிட்டா இந்தமாதிரி பிரச்னை வராது. சர்டிபிகேட் தர்றதுக்கு தாசில்தார்ங்க 'லேட்' பண்றதாலதான், புரோக்கர்ஸ் தலைதுாக்குறாங்க,'' என, எதார்த்த நிலையை விளக்கினாள் சித்ரா.

அதற்குள் சித்ராவின் அம்மா காபி கொண்டு வர, இருவரும் அருந்தி கொண்டே பேசினர்.

''காங்கயம் யூனியனில், ஒரு பஞ்சாயத்தில, ஆறு மாசத்துல மட்டும், 15 லட்சம் ரூபாய்க்கு, எலக்ட்ரிக்கல் வேலை செய்ய 'ஒயர்' வாங்கினதா கணக்கு காண்பிச்சிட்டாங்க. ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிங்க தணிக்கை பண்ணப்போ, ஜி.எஸ்.டி., இல்லாத கடையில இருந்து, 15 லட்சம் ரூபாய்க்கு ஒயர் வாங்கினத கண்டுபிடிச்சிருக்காங்க,''

''இத தெரிஞ்சுகிட்ட பஞ்சாயத்து நிர்வாகத்தை கவனிக்கிறவங்க, பெரிய ஆபீசர் மூலமா, தணிக்கை தகவலை மாத்தி எழுதுணாங்கன்னு, தணிக்கை செஞ்ச ஆபீசர்க்கு, 'டார்ச்சர்' கொடுக்கிறாங்களாம். பாப்பிணியில இருக்கற என் ப்ரெண்டு தான் இந்த மேட்டர சொன்னா,'' என்றாள் மித்ரா.சங்கத்தால் சங்கடம்


''இதெல்லாம் கலெக்டர் கவனத்துக்கு போகாமலா இருக்கும்,'' என சித்ரா கேட்க,''அதெப்படிக்கா தெரியாம இருக்கும். அவரும் ஒற்றர் படையினர் உதவியோட, ஒவ்வொரு வட்டாரத்தை கவனிக்கிற பெரிய ஆபீசர்கள் பத்தியும் தெரிஞ்சு வைச்சிருக்காராம். அதே மாதிரி, தாசில்தார்களை பத்தியும் விரல் நுனியில தகவல் வச்சிருக்காராம்,''

''இதுக்கெல்லாம் காரணம், ஊரக வளர்ச்சி முகமை சார்ந்த சங்கத்துக்காரங்க தானாம். அவங்க எதிரும், புதிருமா இருக்கறதால, ஒவ்வொரு சங்கமும், ஒரே விஷயத்துல, ஒவ்வொரு மாதிரி புகார் சொல்றாங்களாம். இதனாலதான், கலெக்டர் நேரடியாவே களத்துல இறங்கி, ஆபீசர்களின் 'பயோடேட்டா'வை கலெக்ட் பண்ணிட்டார்,'' என்றாள் மித்ரா.

''நம்ம சிட்டி போலீஸ் செயல்படுதா, இல்லை, துாங்குதான்னு தெரியலை; பொதுமக்கள் புகார் கொடுத்தா, கண்டுக்கறதே இல்லைன்னு, ஒரு சமூக ஆர்வலரு 'பேஸ்புக்'ல பதிவ போட்டாரு, பாத்தியாடி,'' என சித்ரா கேட்டாள்.

''இல்லக்கா...''

''அது வைரலா பரவ, ஒற்றர் படையில இருக்கறவங்க, 'ஏங்க, இப்படி பதிவு போட்டிருக்காங்க'ன்னு கேட்டு, அத நீக்க சொன்னதுக்கு, நீக்க முடியாது; வேணும்னா உங்க பெரிய ஆபீசர்கிட்ட காட்டுங்கன்னு' சொல்லிட்டாராம் அந்த சமூக ஆர்வலரு. இத படிச்ச பெரிய ஆபீசர் செம கடுப்பாகிட்டாங்களாம் மித்து,''ஏலம் முடங்கியது''அடடே...'' என்ற மித்ரா, ''அக்கா... அவிநாசிக்கு பக்கத்துல, 'சேய்' பேர் கொண்ட ஊரில், கூட்டுறவு சங்கத்தோட வாழைக்காய் ஏலம் நின்னு போச்சு தெரியுங்களா...'' என கேட்டாள்.''மித்து, அது நின்னு ரெண்டு மூனு வருஷமாச்சு...''

''அது சரிங்க. ஏன் நிறுத்திட்டாங்கன்னு, பலரும் கூட்டுறவு சங்கத்துக்கு பெட்டிஷன் போட்டு, என்ன காரணம்னு, ஆர்.டி.ஐ.,ல் கேள்வி கேட்கறாங்களாம்...''

''அப்றம் என்னாச்சுடி''

''ஏலத்தில, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைச்சுது. ஆனா, உள்ளூரில இருக்கற சில போலி வாழைக்காய் வியாபாரிகள் 'கடை விரிக்க முடியாததால்', அரசியல் செல்வாக்க வச்சு மூட வச்சிட்டாங்க. அதுமட்டுமில்லாம, நாலஞ்சு பேரு, பல லட்சக்கணக்கான ரூபாயை ஏல மையத்தில செலுத்தாம, ஆட்டய போட்டுட்டாங்களாம்,''

''இதோடில்லாம, அதில ஒருத்தரு, சொைஸட்டிக்கு எப்பஎலக் ஷன் வந்தாலும், மனைவியை டைரக்டராக்கி விடுவாராம். இப்படி, ஊழல் குற்றச்சாட்டோ, சொஸைட்டிக்கும் இழப்பு ஏற்படுத்திட்டு, அதே சொஸைட்டியில், டைரக்டரா இருப்பது தான் ஜனநாயக படுகொலை'ன்னு, ஊர் முழுக்க ஒரே பரபரப்பான பேச்சா இருக்குது...''

''இந்த மாதிரி ஆட்கள் எந்த கட்சியில் இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கோணும் மித்து,'' என சித்ரா சொல்லி கொண்டிருந்த போது, அவளின் மொபைல் போன் ஒலித்தது.''ஹலோ, இங்க தேவராஜ்னு யாருமில்லீங்க...'' என இணைப்பை துண்டித்தாள்.

''அக்கா... டைம் ஆச்சு... கிளம்பறேன். அடுத்த வாரம், சேவூர் வாலீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனத்துக்கு போகோணும். ரெடியா இருங்க...'' என சொல்லியவாறே விடைபெற்றாள் மித்ரா.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X