சண்டிகர் : 'மனைவியின் தொலைபேசி உரையாடலை அவரது அனுமதியின்றி கணவர் பதிவு செய்வது தனியுரிமை மீறல்' என பஞ்சாப் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இங்குள்ள பதிண்டா மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் மனைவி தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி விவாகரத்து கோரி 2019ல் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் செய்தார்.
விசாரணையின்போது தன் மனைவி பேசிய அலைபேசி உரையாடல்களை பதிவு செய்து உள்ளதாகவும் அதனை தன் தரப்பு சாட்சியாக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கணவர் கோரினார். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து பஞ்சாய் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்தார்.

மனு மீதான விசாரணையின்போது மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'இந்த உரையாடல் மனைவிக்கு தெரியாமல் பதிவாகி உள்ளது. எப்போது பதிவு செய்யப்பட்டது என தெரியாது. எனவே அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்ய இயலாது' என்றார். இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை கடந்த மாதம் ரத்து செய்தது.
அதற்கான உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: மனைவியின் தொலைபேசி உரையாடலை ரகசியமாக பதிவு செய்வது அவரது தனியுரிமையை மீறும் செயலாகும். தம்பதியர் இடையே உரையாடல் நடந்த சூழ்நிலை அதனை பதிவு செய்த கணவர் எவ்வாறு பதில் அளித்தார் என்பதை உறுதிப்படுத்த முடியாது. ஏனெனில் இந்த உரையாடல் ரகசியமாக பதிவுசெய்யப்பட்டது என தெளிவாகிறது.
மனைவியின் பேச்சை பதிவு செய்யும் நோக்கில் தேவையற்ற கருத்துகளை கணவர் தெரிவித்து இருக்கலாம்.எனவே குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE