உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், அரசு பேருந்து ஓட்டுனர்கள் தொடர்பாக இரண்டு செய்திகள், அடுத்தடுத்து வெளியாகின.முதல் செய்தியில், மதுரையைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் ஆறுமுகம், தனக்கு நெஞ்சுவலி என்று தெரிந்தவுடன் பொறுப்புணர்ச்சியோடு பேருந்தை சாலையோரம் நிறுத்தி, பயணியர் 30 பேரின் உயிரைக் காப்பாற்றிய பின், மாரடைப்பால் இறந்துள்ளார்.

அடுத்த செய்தி, பேருந்து ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும், 'ட்ரிபிள் டியூட்டி' எனும் நடைமுறை. அதாவது மதுரையிலிருந்து கோவை, திருப்பூர், கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு இயக்கப்படும் பஸ் ஓட்டுனருக்கு, எட்டு மணி நேரம் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் தொடர்ந்து, 18 முதல் 24 மணி நேரம் வரை பஸ்களை இயக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கு ஓய்வெடுக்கக் கொடுக்கப்படுவது, வெறும் ஒரு மணி நேரம் தான்.
மேலும், 'டியூட்டி சார்டில்' இரண்டு பணி மேற்கொண்டதாக கையெழுத்து வாங்கி, மூன்று பணி செய்ய வைக்கிறார்களாம்... என்ன கொடுமை இது! அதாவது சரியான ஓய்வே இல்லாமல், ஒரு மனிதன், 24 மணி நேரம் வேலை செய்கிறான். அதுவும் எப்படிப்பட்ட வேலை... பொதுமக்களின் உயிர் காக்கும் வேலை. பயணியர் அனைவரின் உயிரும், இந்த ஓட்டுனர் கையில். அப்படி இருக்க, அந்த ஓட்டுனர் சரியான ஓய்வின்றி பேருந்தை இயக்கினால் எத்தனை விபரீதம்?

'மது அருந்தி வண்டி ஓட்டுவது தவறு' என்று சட்டம் போடும் அரசு, இந்த ஓட்டுனர்களின் நிலையையும் சற்று பரிசீலிக்க வேண்டும். எட்டு மணி நேரம் பஸ் ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, எட்டு மணி நேரம் ஒய்வு அவசியம் என்ற நடைமுறையை, அரசு ஏன் புறக்கணிக்கிறது? இது ஓட்டுனர் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் இல்லை; பேருந்தில் பயணிக்கும் மக்களின் உயிர் பிரச்னையும் கூட. விபத்து ஏற்பட்டால் ஓட்டுனருக்கு சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கும் சட்டம், அதிக பணி அழுத்தத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அப்பாவி ஓட்டுனர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது?
அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, தொழில் சங்க நிர்வாகிகள் இந்த பணிச்சுமையிலிருந்து தப்பித்து கொள்கின்றனர்; சிக்கி கொள்வது, பாவப்பட்ட அப்பாவி ஜென்மங்கள் தான். விபத்து நடக்காமலிருக்க ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு போதிய ஓய்வு பெறுவதை, அரசு உறுதி செய்ய வேண்டும்; அவர்களும் மனிதர்கள் தான்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE