சென்னை : 'ஒருதலைபட்சமாக சட்டத்தை பயன்படுத்தி, எதிர்ப்பாளர்களை அச்சுறுத்த முயற்சி செய்யும் அறிவாலயத்தின் நடவடிக்கைகளுக்கு, நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டம் தந்த சவுக்கடி' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
வாய்மையே வெல்லும். இது, தமிழக அரசின் முத்திரை வாசகம். ஆனால், தமிழக அரசு வாய்மையில் இருந்து தவறி, பொய்மை பாதையில் நடப்பதை, நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது. அறிவாலய தி.மு.க., அரசு தலை குனிய, வாய்மை மீண்டும் வென்றிருக்கிறது. சாமானிய மக்களின் சத்தியத்தின் மீதான நம்பிக்கைக்கு கடைசி புகலிடமாக இருப்பது நீதிமன்றம் மட்டுமே.

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தபோது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக, மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை.
இந்த தீர்ப்பு, தேசியவாதிகளின் கருத்து சுதந்திரத்திற்கு கடிவாளம் போட நினைத்த அறிவாலய அரசுக்கு அறிவு சொல்லும் பாடமாக அமைந்து விட்டது. ஒருதலைபட்சமாக சட்டத்தை பயன்படுத்தி, எதிர்ப்பாளர்களை அச்சுறுத்த முயற்சி செய்யும் அறிவாலயத்தின் நடவடிக்கைகளுக்கு, இந்த தீர்ப்பு சட்டம் தந்த சவுக்கடி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE