உயிரிழந்த கேப்டன் வருண் சிங்: நஞ்சப்பா சத்திரம் மக்கள் சோகம்| Dinamalar

உயிரிழந்த கேப்டன் வருண் சிங்: நஞ்சப்பா சத்திரம் மக்கள் சோகம்

Updated : டிச 15, 2021 | Added : டிச 15, 2021 | கருத்துகள் (6) | |
குன்னூர்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங், 7வது நாளான இன்று (டிச.,15) பெங்களுரு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் நஞ்சப்பா சத்திரம் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு, கடந்த 8ல், கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர்
 கேப்டன் வரூண்,நஞ்சப்பா சத்திரம், மக்கள் சோகம்

குன்னூர்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங், 7வது நாளான இன்று (டிச.,15) பெங்களுரு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் நஞ்சப்பா சத்திரம் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு, கடந்த 8ல், கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் வருகை தந்தனர். கடும் மேகமூட்டம் நிலவிய நிலையில், காட்டேரி நஞ்சப்பா சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில், 13 பேர் உயிரிழந்தனர். முதலாவதாக மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண், 85 சதவீத காயங்களுடன், குன்னுார் மிலிட்டரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பெங்களூரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 8வது நாளான நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் விபத்து ஏற்பட்ட நஞ்சப்பா சத்திரம் பகுதி மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விபத்து ஏற்பட்ட ஹெலிகாப்டர் இருந்த இடத்தில் இருந்து 10 அடி கீழே செடிகளுக்குள் இருந்தவரை மீட்டு வந்தனர். முதல் முதலில் அவரை மீட்ட போது அவரது இதயம் துடித்து கொண்டு இருந்ததும், முனகல் சப்தமும் இன்னும் தங்களது இதயங்களை ரணமாக்கி தற்போதும் கண்ணீரை வரவழைக்கிறது என்கின்றனர் கிராம மக்கள். இவருக்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உட்பட 8 ஆப்ரேன்கள் நடந்துள்ளது எனவும், கோமா நிலையில் இருந்துள்ளதும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இன்ஸ்ட்ரக்டராக (பயிற்றுநராக) இருந்துள்ளார்.

பிபின் ராவத் வரும் அன்று இங்கிருந்து ராணுவ வாகனத்தில் கோவை சென்ற, வருண் அங்கிருந்து முப்படை தளபதியுடன் ஹெலிகாப்டரில் வந்துள்ளார். 8 வது நாளில் நடந்த இவரது இழப்பு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தோள் கொடுத்தேன் பிழைத்து கொள்வார் என்று... சோகம் தந்தார் உலகை விட்டு சென்று...
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில், மீட்பில் உதவிய காட்டேரி பார்க், பகுதியை சேர்ந்த புண்ணிய மூர்த்தி கூறியதாவது: ஹெலிகாப்டர் எரிந்த இடத்தின் கீழே முனகல் சப்தம் கேட்டு பள்ளத்தில் குதித்து சென்றேன். அங்கு காசிம் சேட் உடன், 4 பேர் சுமந்தோம். 14 பேரில் பிழைத்தவர் இவர்தான் என்று அதிகாரிகள் கூறிய போது, அவரை பார்த்து விட வேண்டும் என காத்திருந்தேன். மீட்பின் போது அவரது கால் எனது தோளில் இருந்தது. 'தோள் கொடுத்தேன் பிழைத்து கொள்வார் என்று; ஆனால், இன்றோ சோகம் தந்தார் உலகைவிட்டு சென்று மறைந்துவிட்டார். ஆனால் இவரது நினைவுகள் என்றும் நீங்காது. இந்த சோகம் நெஞ்சை ரணமாக்கி விட்டது. 1:30 மணியளவில் விழித்த போது, அவரது தீக்காயமடைந்த உடலின் பாகமும், காயமடைந்திருந்த உதடும் கண்முன்னே நின்றது. உயிருடன் வருவார் என்று காத்திருந்த நிலையில் அவரது முனகல் சப்தம் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது. இவ்வாறு புண்ணியமூர்த்தி கூறினார்.latest tamil news

மீண்டும் வருவார்... எதிர்பார்ப்பு வீணானதுமுபாரக், சமூக சேவகர், குன்னூர் : ஹெலிகாப்டர் விபத்து நடந்த உடன் சம்பவ வந்தவுடன் தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து முதல் இருவரை மீட்டு வந்தேன். இருவரும் உயிரோடு இருந்தார்கள். கம்பளியில் கட்டி தூக்கி சென்று 108 ஆம்புலென்சில் ஏற்றினோம். காப்பாற்றப்படுவார்கள் என்ற நிலையில் முப்படை தளபதி இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது. கேப்டன் வரூண் மீண்டும் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் இறந்த செய்தி கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X