வாரணாசி :உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் திறக்கப்பட்டுள்ளது, ஆன்மிக ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதே நேரத்தில், சட்டசபை தேர்தலுக்காக இந்த துவக்க விழா நடத்தப்பட்டுள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநில சட்டசபைக்கு, அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் களமிறங்கிஉள்ளன.இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாக திறப்பு விழா, சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் தங்கியிருந்து, இந்த திறப்பு விழா உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.மேலும், பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்களும் குடும்பத்தாருடன் பங்கேற்றனர்.
வெறும் 3,000 சதுர அடியாக இருந்த கோவில், இப்போது ௫ லட்சம் சதுர அடியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.மிகவும் குறுகிய, நெருக்கடியான சாலைகள், எங்கு பார்த்தாலும் குப்பை என்று இருந்து வந்த விஸ்வநாதர் கோவில் சுற்றுப்புறம், தற்போது பிரமிக்கத்தக்க வகையில் மாற்றத்தை சந்தித்துள்ளது. கங்கை நதியில் இருந்து கோவிலுக்கு செல்வதற்கு மிக அகலமான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர பக்தர்களுக்கு பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.நம் நாட்டின் கலாசார, ஆன்மிக சின்னமான இந்த கோவில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், அதிகளவில் பக்தர்கள், பயணியர் இனி வாரணாசிக்கு வருவர். அது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.இருப்பினும், மிக விரைவில் தேர்தல் நடக்க உள்ளதாலேயே, இந்த கோவில் விழா தற்போது நடத்தப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் மற்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
'ஏற்கனவே அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் துவங்கியுள்ளது. தற்போது காசி விஸ்வநாதர் கோவிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது ஹிந்துத்துவா கொள்கைகளை முன்வைத்தும், தேர்தலில் ஓட்டுகளை பெறவும் பா.ஜ., எடுத்துள்ள ஆயுதம்' என, எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.கடந்த, 2019 மார்ச் 8ம் தேதி கோவில் புதுப்பிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்போது, 'கோவில் புதுப்பிக்கும் பணிக்காக பலருடைய சொத்துக்கள் கையகப்படுத்த வேண்டியுள்ளது.'சிலரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. இது மிகவும் கடினமாகவே இருந்தது. இந்த கோவில் புதுப்பிக்கும் நடவடிக்கைக்கு யாரும் அரசியல் சாயம் பூச வேண்டாம்' என, பிரதமர் மோடி குறிப்பிட்டுஇருந்தார்.விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போது நடந்துள்ள விழாவில், அதை தவிர்க்க முடியாது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE