கயா :மலையில் பெய்யும் மழை நீர் தன் கிராமத்துக்கு கிடைக்கும் வகையில், 3 கி.மீ., துாரத்துக்கு தனியாளாக கால்வாய் வெட்டிய, பீஹாரைச் சேர்ந்த 'கால்வாய் மனிதர்' புதிய கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துஉள்ளது. இங்குள்ள கயா மாவட்டம் கோத்திலாவா பகுதியைச் சேர்ந்தவர் லாங்கி புய்யன். அருகில் உள்ள மலைப் பகுதிக்கு கால்நடைகளை மேய்க்க அழைத்துச் சென்று வந்த அவர், அங்கு பெய்யும் மழை நீர் வேறு பகுதிக்கு செல்வதை பார்த்தார்.அந்த மழை நீரை தன் கிராமத்துக்கு திரும்பும் வகையில், கால்வாய் அமைக்க முடிவு செய்தார்.
கடந்த, 30 ஆண்டுகளாக, தனியாளாக மலையில் இருந்து தன் கிராமத்துக்கு கால்வாயை அவர் அமைத்தார். கடந்தாண்டு இந்தப் பணியை அவர் முடித்தார். தற்போது அவருடைய கிராமத்துக்கு தேவையான தண்ணீர் கிடைத்து வருகிறது.இந்நிலையில், அருகில் உள்ள ஐந்து கிராமங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும் வகையில், மற்றொரு கால்வாயை அமைக்கும் பணியை அவர் துவக்கியுள்ளார்.'போதிய தண்ணீர் கிடைத்தால், அந்த கிராமங்களில் விவசாயம் செழிக்கும். மக்களும் வறுமையில் இருந்து மீள்வர்' என, புய்யன் கூறியுள்ளார்.