பஸ் கவிழ்ந்து 9 பேர் பலி
அமராவதி: தெலுங்கானாவின் அஸ்வராப்பேட்டையில் இருந்து ஆந்திர அரசு பேருந்து ஒன்று 35 பயணியருடன், நேற்று மேற்கு கோதாவரி மாவட்டத்திற்கு புறப்பட்டது.
வழியில், ஜங்காரெட்டிகுடம் அருகே உள்ள பாலத்தில், எதிரே வந்த லாரிக்கு வழிவிடும்போது நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்தது. விபத்தில் ஐந்து பெண்கள் உட்பட ஒன்பது பேர் பலியாயினர். அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
தேடப்பட்ட பயங்கரவாதி கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் புல்வாமா மாவட்டம் உஸ்ரம்பத்ரி கிராமத்தில் பயங்கரவாதி ஒருவர் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர், நேற்று அங்கு சென்றனர்.
அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி கொல்லப்பட்டார். அவர், போலீசார் மீதான பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடைய ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் பெரோஸ் அகமது தர் என தெரியவந்தது. இவர் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் என அதிகாரிகள் கூறினர்.
ரயில்வே ஊழியர்கள் கைது
புதுடில்லி: லோக்சபாவில் நேற்று ஒரு கேள்விக்கு, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், ரயில்வே சொத்துக்கள் திருடு போவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.கடந்த 2016 முதல் நவ., 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில், ரயில்வேயில் நடந்த 1,106 பார்சல் திருட்டு வழக்குகள் தொடர்பாக ரயில்வே ஊழியர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்' எனக் கூறியுள்ளார்.
நாடு கடத்தப்பட்ட பிரபல தாதா
மும்பை: மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பிரபல தாதா சோட்டா ராஜனுடன் இணைந்து செயல்பட்ட தாதா சுரேஷ் பூஜாரி, 15 ஆண்டுகளுக்கு முன் தலைமறைவானார்.
அவர் பிலிப்பைன்சில் இருப்பதை அறிந்த மத்திய அரசின் நடவடிக்கைகளால் நாடு கடத்தப்பட்டு, நேற்று முன்தினம் டில்லி வந்தார். மத்திய உளவுத்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
பலாத்காரம்: முதியவர் கைது
தானே: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தந்தையை இழந்த பின், தாயால் கைவிடப்பட்ட 14 வயது சிறுமி ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்தார்.
வீட்டின் உரிமையாளரான 60 வயது முதியவர், சிறுமியை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அது குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளார். தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, முதியவரை நேற்று கைது செய்தனர்.