ஓமலூர்: ''கூட்டணி மாறுவது பா.ம.க.,வுக்கு வாடிக்கை,'' என, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்தார்.சேலத்தில் அவர் அளித்த பேட்டி: முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, அவரது உறவினர், நண்பர்களின் வீடுகளில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சோதனை நடத்தப்படுகிறது.
அ.தி.மு.க.,வை நேரடியாக எதிர்க்க திராணியல்லாத தி.மு.க., அரசு, அதிகாரத்தை பயன்படுத்தி, லஞ்ச ஒழிப்பு போலீசாரை ஏவி, சோதனை நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளது. அ.தி.மு.க., எந்த வழக்கானாலும், சட்டரீதியாக எதிர்கொள்ளும்.'கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்' தான், தி.மு.க.,வின் தாரக மந்திரம். ஆறு மாதங்களில், 6,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்துள்ளனர்.
தி.மு.க., குளறுபடியாக ஆட்சி செய்கிறது. ஐந்து சவரன் நகை கடன் தள்ளுபடி எனும் வாக்குறுதியை நம்பி, ஏழை மக்கள் ஏமாந்து விட்டனர். உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்ற பேச்சு அடிபடுவதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். தி.மு.க.,வை வளர்த்த தலைவர்கள், அனுபவமுள்ள முன்னோடிகள் இருந்தாலும், குடும்ப வாரிசுதான், அந்த கட்சியில் பதவிக்கு வரமுடியும் என்பது அக்கட்சி தலைவிதி.
'அம்மா சிமென்ட்' பெயரை, 'வலிமை சிமென்ட்' என மாற்றி உள்ளனர். அதையாவது விலை குறைவாக தர வேண்டும். பா.ம.க.,வினருக்கு, அ.தி.மு.க., என்ன துரோகம் செய்தது என்பதை ராமதாஸ் தான் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால்தான் பதில் அளிக்க இயலும்.உள்ளாட்சி தேர்தலில், கூட்டணியில் இருந்து விலகியதாக பா.ம.க.,வினர் கூறியுள்ள நிலையில், வேறு கேள்விகள் எழ வாய்ப்பில்லை. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பா.ம.க.,வுக்கு வாடிக்கையாகிவிட்டது.இவ்வாறு பழனிசாமி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE