உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
கே.மணிகண்டன், ஒட்டப்பிடாரம், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'தேச துரோக சட்டத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை' என, மத்திய சட்ட அமைச்சர் தெரிவித்து உள்ளார். 'இந்த சட்டத்தின் கீழ் மேலும் பல அப்பாவி மக்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் திட்டம் உள்ளதா?' என ரொம்ப சாமர்த்தியமாக பேசுவதாக நினைத்து, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறி இருக்கிறார்.

மத்திய அரசு அப்படி செய்யும் என்றால், 'ஐ.என்.எக்ஸ்., மீடியா, ஏர்செல் மேக்சிஸ்' போன்ற குற்ற வழக்குகளில், ஜாமின் வாங்கி வெளியே உலா வரும் ப.சிதம்பரம் மீது, அந்த தேச துரோக சட்டத்தின் வாயிலாகவே நடவடிக்கை எடுத்து இருப்பரே!
நம் நாட்டுக்காக நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரத்தை, நம் பகை நாடான பாகிஸ்தானுக்கு சகாய விலையில் விற்ற ப.சிதம்பரத்தை வெளியே நடமாட விட்டிருப்பரா? நாட்டின் நலனுக்கு எதிராக அன்றாடம் ஏதாவது ஒரு கருத்தை கூறத் தான் அனுமதித்து இருப்பரா?
தற்போது ஆட்சியில், காங்., இருந்தால் கூட, ஆ.ராசா, கனிமொழி ஆகியோரை திகாரில் ரொட்டியும், சப்ஜியும் உண்ண வைத்தது போல, ப.சிதம்பரத்தையும் உள்ளே வைத்து உபசரித்து இருப்பர்.
சி.பி.ஐ.,யால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, 106 நாள் சிறைவாசம் அனுபவித்த சிதம்பரத்தை பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இயங்கும் மத்திய பா.ஜ., அரசு, பெரிய மனதுடன், வெளியே நடமாட விட்டிருக்கிறது. அதனால் தான் ப.சிதம்பரம் இதுவும் பேசுவார்; இதற்கு மேலும் பேசுவார்!