கொச்சி:'திருமணத்தின் போது மணப்பெண்ணின் பெற்றோர் யாருடைய வற்புறுத்தலும் இன்றி தானாக முன்வந்து அளிக்கும் பரிசுப்பொருட்களை வரதட்சணையாக கருத முடியாது' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் கொச்சியில் உள்ள தொடியூர் கிராமத்தை சேர்ந்த பெண், மாவட்ட வரதட்சணை தடுப்பு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், திருமணத்தின் போது தன் பெற்றோர் அளித்த 55 சவரன் தங்க நகைகளை அவரது கணவர் தன் வங்கி லாக்கரில் வைத்துள்ளதாகவும், அதை தன்னிடம் திருப்பி அளிக்க உத்தரவிடுமாறும் கோரினார்.
இதை விசாரித்த மாவட்ட வரதட்சணை தடுப்பு பிரிவு அதிகாரி, நகைகளை திருப்பி அளிக்குமாறு பெண்ணின் கணவருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பெண்ணின் கணவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதில், 'அந்த 55 சவரன் நகைகள், வரதட்சணையாக வழங்கப்படவில்லை. எனவே, அதை திருப்பி அளிக்குமாறு உத்தரவிட மாவட்ட வரதட்சணை தடுப்பு அதிகாரிக்கு உரிமையில்லை' எனக் கூறப்பட்டது.
இந்த மனு, நீதிபதி எம்.ஆர்.அனிதா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'திருமணத்தின் போது பெற்ற மகளின் நலனுக்காக யாருடைய வற்புறுத்தலும் இன்றி பெற்றோர் அளிக்கும் பரிசுப் பொருட்களை வரதட்சணையாக கருத முடியாது' என, உத்தரவிட்டார்.
இந்நிலையில், லாக்கரில் உள்ள 55 சவரன் நகை மற்றும் திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் தனக்கு அளித்த தங்க சங்கிலி உள்ளிட்டவற்றை திருப்பி அளிக்க பெண்ணின் கணவர் சம்மதித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE