பெலகாவி-விதிமுறைகளுக்கு எதிராக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் கீழ், சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் உட்பட, 14 காங்கிரஸ் எம்.எல்.சி.,க்கள், நேற்று ஒருநாள் கூட்டத்தில் பங்கேற்பதிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அமைச்சர் பைரதி பசவராஜ் மீதான, நில அபகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக, பெலகாவியில் நேற்று நடந்த, சட்ட மேலவை கூட்டத்தில் விவாதிக்க, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். ஆனால் இவ்வழக்கு நீதிமன்ற விசாரணை கட்டத்தில் இருப்பதால், விவாதிக்க வாய்ப்பளிக்க முடியாது என, சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி கூறினார். இதனால் பைரதி பசவராஜுக்கு எதிரான விவாதம் முடிவடைந்ததாக, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி அறிவித்தார்.தர்ணாபிடிவாதத்தை தளர்த்தாத காங்கிரஸ் எம்.எல்.சி.,க்கள், விவாதிக்க வலியுறுத்தி, மேலவை தலைவர் இருக்கை முன் தர்ணா நடத்தினர்.
பா.ஜ., அரசு மற்றும் அமைச்சர் பைரதி பசவராஜுக்கு எதிராக தொடர்ந்து கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். ஊழல் அரசு என்று நோட்டீஸ்கள் காண்பித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.அந்த குறிப்பிட்ட விஷயம் தொடர்பான விவாதம் முடிந்த பின்னும் தர்ணா நடத்துவது சரியில்லை. அனைவரும் அவரவர் இருக்கையில் போய் அமருங்கள் என்று மேலவை தலைவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.இந்த வேளையில் வீட்டு வசதி துறை அமைச்சர் சோமண்ணா குறிக்கிட்டு பேசுகையில், மேலவை தலைவர் ரூலிங் கொடுத்த பின் மீண்டும் விவாதிப்பது சரியில்லை. கூட்டத்தை சிறப்பான முறையில் நடத்த ஒத்துழையுங்கள், என்றார்.உத்தரவுஆனாலும், தர்ணா கை விடாமல் அமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். ஆக்ரோஷமடைந்த பசவராஜ் ஹொரட்டி, அவையின் விதிமுறைகளுக்கு எதிராக நடந்து கொண்டதால், தர்ணாவில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல், உட்பட 14 காங்கிரஸ் உறுப்பினர்களை ஒருநாள் வரை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
பின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.ஆனாலும் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கொண்டே இருந்தனர். மீண்டும் கூட்டம் கூடியதும், மேலவை தலைவர் இருக்கையில் பா.ஜ.,வின் தேஜஸ்வினி கவுடா அமர்ந்திருந்தார். அவரும் தர்ணா கை விடுங்கள், நீங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.எதையும் பொருட்படுத்தாமல் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து தர்ணா நடத்தி கொண்டே இருந்தனர். இறுதியில் தொடர் தர்ணாவால் கூச்சல், குழப்பம் நிலவியதால் இன்று காலை 11:00 மணிக்கு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement