கொரோனா வைரசை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளால், ஒமைக்ரான் என்ற திரிபு வைரசை எதிர்க்க முடியுமா? இந்தக் கேள்விக்கு, சற்று ஆறுதல் தரும் செய்திகல் வரத் துவங்கியுள்ளன.
பைசர் மற்றும் பயோன்டெக் ஆகியவற்றின் தடுப்பூசிகளைக் கொண்டு நடத்திய சோதனையின் முதற்கட்ட முடிவுகள் நம்பிக்கை தருவதாக கொரோனா சிகிச்சை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
ஒமைக்ரான் வைரசின் அமைப்பை ஒத்திருக்கும் புரதங்களை ஆய்வகத்தில் வைத்து, அதற்கு தற்போதைய தடுப்பூசிகள் எப்படி போரிடுகின்றன என்று பைசர் மற்றும் பயோன்டெக் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் சோதித்தனர்.
ஒமைக்ரான் புரதத்திற்கு அந்த இரு தடுப்பூசிகள் போதிய எதிர்ப்பைத் தெரிவித்திருப்பதும், ரத்த மாதிரிகளில், அதற்கான ஆன்டிபாடிகள் உருவாகியிருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இருந்தாலும், இரண்டு முறை தடுப்பூசி போட்டவர்களின் உடலில், சிலருக்கு ஒமைக்ரானை எதிர்க்கும் திறன் இருக்காமல் போகக் கூடும் என்பதை அவர்கள் ஆய்வின் வாயிலாக கணித்துள்ளனர்.
இத்தகைய குறையைப் போக்க, மூன்றாவது முறையாக பைசர் அல்லது பயோன்டெக்கின் தடுப்பூசிகளை, 'பூஸ்டர் ஷாட்' போல போட்டுக் கொள்வது, ஒமைக்ரானிலிருந்து பலமடங்கு பாதுகாப்பைத் தரும் என இரு நிறுவனங்களின் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இதனால் தானோ என்னவோ, மேற்கத்திய நாடுகளில் பலவற்றில், பூஸ்டர் தடுப்பூசி போடுவது நல்லது என்ற முடிவுக்கு அரசுகள் வந்துள்ளன. விரைவில், சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் வந்துவிடும். இத்துடன் பெரியவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியும் போட்டால் போதும். திடீர் கொரோனா தொற்றுகள் ஓங்குவதையும் அதன் திரிபு வைரஸ்கள் பரவுவதையும் வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE