சென்னை: அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் பொதுமக்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 1.11 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. காங்கோ நாட்டில் இருந்து வந்த ஆரணியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கு முந்தைய அறிகுறி தென்பட்டுள்ளது. அவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆரணியை சேர்ந்த பெண் உட்பட 8 பேரின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் பரவலை தடுக்க தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 2 டோஸ் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டால் உயிரிழப்பை தடுக்கலாம். ஒமைக்ரான் பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE