சென்னை :இந்தியா -- பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதன், 50ம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு, சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.இந்தியா - பாகிஸ்தான் இடையே, 1971ல் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த போரில், பாகிஸ்தானின், 93 ஆயிரம் ராணுவ வீரர்கள், இந்தியாவிடம் நிபந்தனையின்றி சரணடைந்தனர். இப்போரின் விளைவாக வங்க தேசம் விடுதலை அடைந்தது.
இந்தப் போரில், தாய் நாட்டிற்காக இன்னுயிர் நீத்த முப்படைகளின் வீரர்களை நினைவுகூர்ந்து, ஆண்டுதோறும், டிசம்பர் 16ல், 'விஜய் திவாஸ்' எனும் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு
வருகிறது.இந்த ஆண்டு, இந்த வெற்றியின் 50-ம் ஆண்டு பொன் விழா கொண்டாடப்படுகிறது.
உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவாக, சென்னை காமராஜர் சாலையில் கட்டுப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னத்தில், முதல்வர் ஸ்டாலின் நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.மேலும், தென்பிராந்திய ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் உட்பட முப்படைகளின் உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர். 1971ம் ஆண்டு போரில் பங்கேற்று, வீர்சக்ரா விருதுகள் பெற்ற, ரியர் அட்மிரல் எஸ்.ராம்சாகர், ஏ.கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் பங்கேற்றனர்.
பொன் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, போர் நினைவுச் சின்னத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி வரை, காலை 10:00 முதல், மாலை 5:00 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.
லெப்டினன்ட் ஜெனரல் அருண் கூறியதாவது: இன்று முதல் நான்கு நாட்கள் பொதுமக்களின் பார்வைக்காக, போர் நினைவுச் சின்னம் திறக்கப்படுகிறது.எனவே, பொதுமக்கள், தங்களது குழந்தைகளை அழைத்து வந்து காண்பிக்க வேண்டும். இதன் வாயிலாக, இன்றைய இளம் தலைமுறையினர், நம் வீரர்களின் தியாகத்தை அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE