கோவை:கொரோனாவுக்கு பின், அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்துள்ள அதேவேளையில், சில பள்ளிகளில் இடைநிற்றலும் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதற்கான காரணங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதால், தலைமையாசிரியர்கள் விழிபிதுங்கியுள்ளனர்.
பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளத்தில், அனைத்து வகை பள்ளி மாணவர்களின் தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட மாணவர் வேறு பள்ளியில் சேருவதற்கு, மாற்றுச்சான்றிதழ் பெற்றாலும், நீண்ட நாட்கள் விடுப்பில் இருந்தாலும், பொது தளத்துக்கு, மாணவர்கள் விபரம் மாற்றப்படும்.
இம்மாணவர்கள், வேறு பள்ளியில் சேர்ந்ததும், அப்பள்ளிக்கான இணையதள பதிவேட்டில் சேர்க்கப்படுவர். வேறு பள்ளியில் சேராமல், பல மாதங்கள் விடுப்பில் இருந்தால், பொது தளத்தில் அம்மாணவர்கள் விபரங்கள் நீடிக்கும். இம்மாணவர்கள் இடைநிற்றல் தழுவியதாக கருதப்பட்டு, அம்மாணவர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சிக்கப்படும்.நடப்பு கல்வியாண்டில், செப்., மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. மூன்று மாதத்துக்கும் மேலாக, பொது தளத்தில் உள்ள மாணவர்கள் விபரங்கள் சமீபத்தில் திரட்டப்பட்டன. இதில், ஒன்பதாம் வகுப்பில், அதிக இடைநிற்றல் தழுவியோர் பட்டியலில், எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டம் இடம்பெற்றிருந்தது. பிளஸ் 1ல் இடைநிற்றல் தழுவியோர் கல்வி மாவட்டங்களில், பேரூர் முன்னிலை வகிக்கிறது.
இதற்கான காரணத்தை, பள்ளி தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும், இடைநிற்றல் தழுவிய மாணவர்களை பள்ளியில் சேர்க்க, தேவையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இடைநிற்றல் மாணவர்களை தேடி, அவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று தகவல் திரட்ட வேண்டியிருப்பதால், தலைமையாசிரியர்கள் விழிபிதுங்கியிருக்கின்றனர்.முதன்மை கல்வி அலுவலர் கீதாவிடம் கேட்டபோது, ''எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்தில், வெளிமாநில மாணவர்கள் அதிகமாக படிக்கின்றனர். கொரோனா தொற்று பரவலுக்கு பின், வெவ்வேறு இடங்களுக்குச் சென்று விட்டனர். இடப்பெயர்வு காரணமாக பல மாணவர்களை கண்டறிவது சிரமமாக உள்ளது.
''தமிழகம் தவிர, வேறு மாநில பள்ளிகளில், இம்மாணவர்கள் சேர்ந்தாலும், 'எமிஸ்' பொதுத்தளத்தில் இருந்து பெயர் நீக்கப்படமாட்டாது.''மாநிலத்துக்குள் மட்டுமே, வேறு பள்ளிகளில் சேர்ந்தால், அம்மாணவர்களின் தகவல்கள், பொதுத்தளத்தில் இருந்து குறிப்பிட்ட பள்ளிக்கு மாற்றப்படும். பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., சேர்ந்த மாணவர்களின் விபரங்களையும், 'எமிஸ்' பொதுத்தளத்தில் இருந்து நீக்க முடியாது. இதுபோன்ற காரணங்களை இயக்குனரகத்துக்கு தெரிவிக்க வேண்டியுள்ளதால், அந்தந்த பள்ளியில் இடைநிற்றலுக்கான காரணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE