தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி., அறிக்கை: முதலாம் ராஜராஜ சோழன் இலங்கையை வெற்றி கொண்டதன் அடையாளமாக வெளியிட்ட ஈழக்காசுகளை, ராமநாதபுரம், திருப்புல்லாணியைச் சேர்ந்த, 12ம் வகுப்பு மாணவி, கு. முனீஸ்வரி கண்டெடுத்திருப்பது மகிழ்வை தருகிறது. மாணவர்களுக்குத் தொல்பொருட்களை அடையாளம் காணவும், கல்வெட்டுகளை படிக்கவும் பயிற்சி அளித்துவரும் பள்ளி நிர்வாகத்திற்கு வாழ்த்துகள்.
இதுபோன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு ஆதரவு கொடுப்பதில், உங்களுக்கு நிகர், உங்கள் கட்சியில் யாரும் இல்லை!
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேட்டி: எம்.எல்.ஏ.,வாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது.
ஏன், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்க்கிறது என சொன்னால் குறைந்தா போய் விடுவீர்கள்?
விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் வன்னி அரசு அறிக்கை: நீதிபதிகளை தமக்கானவர்களாக மாற்றுவது அல்லது அச்சுறுத்தி பணிய வைப்பது பா.ஜ.,வின் யுக்தி. பாபர் மசூதி நிலம் தொடர்பான தீர்ப்புக்கு முன் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு என்ன நடந்தது... ஜனநாயகத்தின் மேன்மையான நீதிமன்றங்கள் சுவாமிநாதன் போன்றவர்களின் தீர்ப்புகளால் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.
உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினால், நீதிமன்றத்தையும், நீதிபதியையும் பாராட்டுவது; இல்லையேல், துாற்றுவது. இது வாடிக்கை தானே!
புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி பேச்சு: நாங்களும் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறோம். ஆனால், இந்த நாட்டையோ, இந்த மண்ணையோ விட்டு கொடுத்தது கிடையாது.

உங்களைப் போலத் தான் அனைவரும் இருக்க வேண்டும். நாடு நமக்கென்ன செய்தது என எண்ணாமல், நாம் நாட்டுக்கு என்ன செய்துள்ளோம் என யோசிப்பது தான் சிறந்தது!
தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: தமிழக சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு, 'சிறுபான்மை கல்வி நிறுவனம்' என்ற சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிரமங்களை நீக்கி, விரைவாக அந்த சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என முதல்வரை சந்தித்து வேண்டுகோள் வைத்தோம்.
ஆவன செய்வதாக முதல்வர் உறுதியளித்தார். இது வரை அத்தகைய சான்றிதழ் கிடைக்காமல் இருந்ததா... ஆச்சர்யமாக இருக்கிறதே; சிறுபான்மையினருக்கு ஆதரவான அரசில் விரைவாக கிடைக்காமல் போனது கவலை அளிக்கிறதே!
தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேச்சு: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் யார் என்பதை தலைமை தான் முடிவு செய்யும். எனினும், அந்த வாய்ப்பு கிடைத்தால் அந்த வேலையை செய்ய திறமையும் ஆர்வமும் எனக்கு இருக்கிறது.
இப்படித் தான் அழகிரி, தங்கபாலு, இளங்கோவன் போன்ற பலரின் வாரிசுகள் சொல்லிக் கொள்கின்றனர். ஆனாலும் கட்சி மேலிடம், என்ன நினைக்கிறதோ தெரியவில்லையே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE