கர்நாடக சட்டசபையில் நேற்று (டிச.,16) விவசாயிகள் பிரச்னை எழுப்பப்பட்டது. விவசாயிகள் பிரச்சினை குறித்து விரிவாக ஆலோசிக்க நேரம் ஒதுக்குமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது பேசிய சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே, 'அனைத்து உறுப்பினர்களுக்கும் பேச நேரம் ஒதுக்கினால் எப்படி அலுவல்களை மேற்கொள்வது. நீங்கள் என்ன முடிவு செய்தாலும் நான் ஆம் என்று தான் சொல்வேன். இப்போது இங்கு இருக்கும் நிலைமை என் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. இதை நான் சமாளிக்க முடியாது. அதனால் அமைதியாக நடப்பதை அனுபவிக்கலாம் என முடிவு செய்துவிட்டேன். எனது அக்கறை எல்லாம் சட்டசபை தடைபடாமல் அலுவல் நடக்க வேண்டும் என்பதே' என்றார்.
அதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஆர்.ரமேஷ் குமார், 'பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. நீங்களும் அந்த நிலையில் தான் இருக்கிறீர்கள்,' என சபாநாயகரை பார்த்து சொல்ல, அவையில் சிரிப்பலை எழுந்தது. இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது சர்ச்சையாகியுள்ளது.

மன்னிப்பு:
இந்நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கோருவதாக ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'நான் பேச்சுவாக்கில் தான் அப்படிச் சொல்லிவிட்டேனே தவிர கொடுங்குற்றமான பாலியல் பலாத்காரத்தை அங்கீகரிக்கவில்லை. இனி சட்டசபையில் கவனமாக பேசுவேன்,' என்றார். தொடர்ந்து இன்றைய சட்டசபையிலும் அவர், 'பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,' எனக் கூறினார். பின்னர், 'அவர் மன்னிப்பு கேட்டுள்ளார், மேலும் அதை பெரிதாக்க வேண்டாம்,' என சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE