திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாப்பர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (டிச.,17) காலை கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. இதில் அன்பழகன் (9ம் வகுப்பு), விஸ்வ ரஞ்சன் (8ம் வகுப்பு), சுதீஸ் (6ம் வகுப்பு) ஆகிய மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சஞ்சய், இசக்கி பிரகாஸ், சேக் அபுபக்கர், அப்துல்லா ஆகியோர் படுகாயங்களுடன் திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளியிலிருந்து பிற மாணவர்களை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். சக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கு முன் மாணவர்கள் ஒன்றுக்கூடி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட கல்வி அதிகாரிக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைமை ஆசிரியர் மீது வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியை ஞானசெல்வி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிதியுதவி
சுவர் இடிந்து உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்து சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்

பள்ளியின் கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் பள்ளி தாளாளர் மற்றும் ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்பாட்டம் நடந்தது.
பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது
இச்சம்பவத்தில் பள்ளி தாளாளர் , பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜாமினில் வெளி வர முடியாத பிரிவில் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறு உத்தரவு வரும் வரை பள்ளி்க்கு விடுமுறை
பள்ளி கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை ( 18 ம் தேதி) முதல் மறு உத்தரவு வரும் வரையில் பள்ளி்க்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அலுவலர் தெரிவித்து உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE