புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் கவனத்தில் கொள்ளப்படாத துறை என எதுவும் கிடையாது எனவும், 7 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
எப்ஐசிசிஐ கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: கடந்த 7 ஆண்டுகளில் ஒரு முறைகேடு புகார் கூட வரவில்லை. நாங்கள் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கி உள்ளோம். நாங்கள் பல முடிவுகளை எடுத்துள்ளோம். அதில் ஒன்றிரண்டு தவறாக இருக்கலாம். ஆனால், எந்த தவறான நோக்கத்திற்காகவும் முடிவு எடுத்தது இல்லை.

60 கோடி மக்கள், வங்கிக்கணக்கு, மின்சார வசதி, காஸ் இணைப்பு மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் இருந்தனர். ஆனால், இதனை மோடி அரசு தான் ஏற்படுத்தி கொடுத்தது. இதன் மூலம், அவர்களுக்கும் இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கை வந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான தலைமை பண்பும், 130 கோடி மக்களின் பங்களிப்பு காரணமாக கோவிட் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்படும் என ஒருவரும் நினைத்தது இல்லை. ராமஜென்மபூமி விவகாரம், அமைதியாக தீர்க்கப்படும் என ஒருவரும் எண்ணியதில்லை. இடதுசாரி பயங்கரவாதம் பெரும்பாலும் முடிந்து போனது. சுகாதார உள்கட்டமைப்பில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளை மனதில் வைத்து குடிநீர் தொடர்பான கொள்கை வடிவமைக்கப்பட்டது. மோடி அரசு, கவனத்தில் கொள்ளாத எந்த துறையும் இல்லை. நாட்டில் கடந்த 7 ஆண்டுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில், இந்தியாவை ஆட்சி செய்த கட்சி, 4 அல்லது 5 முக்கிய முடிவுகளை மட்டுமே எடுத்தது. ஆனால், 7 ஆண்டுகளில் மோடி அரசு 50 முக்கிய முடிவுகளை எடுத்தது. கோவிட்டிற்கு பின்பு வலிமையான பொருளாதார நடவடிக்கைகள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இதற்கு மோடியே காரணம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE