வேலுார்: கட்ட பஞ்சாயத்து, கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் அமைச்சர்களாக உள்ளனர் என பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறினார்.
பா.ஜ.,வின் மூன்று நாள் (டிச.,17, 18, 19) பயிற்சி முகாம் வேலுார் அருகே பிள்ளையார்குப்பத்தில் நடக்கிறது. முகாமை தொடங்கி வைத்த பின் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று கூறிவிட்டு, டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை அதிகரித்துள்ளனர். மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றுவதில் தி.மு.க., தோல்வியடைந்து விட்டது. தி.மு.க., மீது எழுந்துள்ள விமர்சனங்களை தாங்க முடியாமல், கள்ளச் சாராயம் மூலம் அரசியலுக்கு வந்த அமைச்சர் ஒருவர், பா.ஜ., தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
நாங்கள் கட்ட பஞ்சாயத்து, அடிதடி செய்து அரசியலுக்கு வரவில்லை. அண்ணாமலை ஐ.பி.எஸ்., படித்து விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். காந்தியின் பெயரில் வந்துள்ள தீய சக்திகளை கட்டுப்படுத்த ஸ்டாலின் தவறி விட்டார். இதே நிலைமை நீடித்தால், ஸ்டாலினுக்கு தான் மோசமான விளைவுகள் ஏற்படும். 100 ஆண்டுகளுக்கு முன்பு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த காந்தி, இவ்வளவு புனிதமான கோவிலுக்கு அசுத்தங்களை தாண்டி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக கண்ணீர் விட்டார். இதை கருத்தில் கொண்ட பிரதமர் மோடி, 330 கோடி ரூபாய் மதிப்பில் காசி விஸ்வநாதர் கோவிலை புனரமைப்பு செய்து, 5 லட்சம் சதுர அடியாக விரிவுபடுத்தினார்.

கடந்த ஆட்சியில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை எதிர்த்தவர் துரைமுருகன். காட்பாடியில் அவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருவதே இதற்கு காரணம். தண்ணீர் கொடுக்க மறுப்பவர்கள், கட்டப்பஞ்சாயத்து, கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு தி.மு.க., ஆட்சியில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. வேலுார் அருகே வெட்டு வானம் எல்லையம்மன் கோவிலில் 128 கிலோ எடையில் செய்யப்பட்ட வெள்ளித் தேர் இப்போது மரத்தேராக உள்ளது. கோவில்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஹிந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE