இது எம்.ஜி.ஆரின் கட்சி!
டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை ராயப்பேட்டையிலுள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு, எம்.ஜி.ஆர்., பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு, 'கட்சியின் வரலாற்றை பார்க்க வேண்டும்; இடத்தின் உயிலை புரட்ட வேண்டும்' என, 1,008 பிரச்னைகள்
எழுந்தன.ஒரு வழியாக கட்சி அலுவலகத்திற்கு, 'எம்.ஜி.ஆர்., மாளிகை' என்று பெயர் சூட்டினர். இந்த விஷயத்தை அறிக்கை, தீர்மானம் வழியாகவோ அல்லது திறப்பு விழாவின் மூலமாகவோ மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை.நம் நாளிதழ், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், 'எம்.ஜி.ஆர்., மாளிகை' என்று பெயர் பலகை இருப்பதை வட்டம் போட்டு காட்டியது. அந்த அளவிற்கு சிறிய அளவில், எம்.ஜி.ஆர்., பெயரை அமைத்து இருந்தனர்.கட்சி போஸ்டர்களில், எம்.ஜி.ஆர்., படத்தை, 'ஸ்டாம்ப்' அளவுக்கு போட்டு வருகின்றனர்; இப்போது அவரது பெயரையும் சுருக்கி விட்டனர்.கோவையில் இருக்கும் கட்சி அலுவலகத்திற்கு, 'இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா மாளிகை' என, நீண்ட அளவில் பெயர் சூட்டியுள்ளனர்.
அந்த ஜெயலலிதாவையே, அரசியலுக்கு அறிமுகம் செய்தவர்... அ.தி.மு.க., எனும் மாபெரும் கட்சியை உருவாக்கியவர், எம்.ஜி.ஆர்., தான் என்பதை மறந்து விட்டனர்.அவரது பெயரை, எம்.ஜி.ஆர்., என்று ஒருமையில் சூட்டியுள்ளனர், இன்றைய அ.தி.மு.க.,வினர்!மத்திய அரசுக்கு சொந்தமான ரயில் நிலையத்திற்கு கூட, 'புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.'புரட்சி நடிகர், இதயக்கனி, பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், புரட்சித்தலைவர்' என, எம்.ஜி.ஆருக்கு எத்தனையோ பட்டப் பெயர்கள் உள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய விருதான 'பாரத ரத்னா' கூட, அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இவற்றில் ஒன்று கூட, அ.தி.மு.க.,வின் இரட்டை தலைமைக்கு நினைவுக்கு வரவில்லையா?எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., டாக்டர் கே.பி.ராமலிங்கம் சட்டசபையில் பேசும் போது, 'கருணாநிதி' என்று குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர்., அவரை அழைத்து, 'நீங்கள் தான் அவருக்கு பெயர் வைத்தீரா... போய் அவரிடம் மன்னிப்பு கேளுங்கள்' என்றார்.இன்றைய அ.தி.மு.க.,வினர் ஒன்றை மறந்துவிட கூடாது, இது எம்.ஜி.ஆரின் கட்சி!
அவசரகதியில் பழி சுமத்தாதீர்!
எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இப்பகுதியில் வாசகர் ஒருவர், 'ஆசிரியர்களுக்கு சுதந்திரம் அளியுங்கள்' என்ற தலைப்பில், இன்றைய பள்ளி கற்பித்தல் சூழல் குறித்து தெளிவாக கூறியிருந்தார். அக்கருத்தை, தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.ஆசிரியர்களின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது.மாணவர்களை அடிப்பதோ, கண்டிப்பதோ கூடாது. அவ்வாறு செய்தால், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்தது. இதை, மாணவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.கண்டிப்புடன் நடக்கும் ஆசிரியர்களை கேலி செய்வது, மிரட்டுவது, ஜாதியைக் கூறி மறைமுகமாக திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.இவற்றை தாங்கியபடி ஆசிரியர் பாடம் நடத்தினால், 'பாலியல் தொல்லை கொடுக்கிறார்' என பழி சுமத்தி, அவரை அவமானப்படுத்துகின்றனர்.இன்றைய சூழலில் அனைத்து ஆசிரியர்களும், தம் மானத்தையும், வாழ்க்கையையும் காத்து கொள்ள வேண்டுமானால் கண், காது இரண்டுமே செயல்படாதது போல இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.இந்நிலை நீடிக்குமானால், தமிழகத்தின் ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வியும், ஒழுக்கமும் கேள்விக்குறியாகி விடும்.கிறிஸ்துவ புனித நுாலான பைபிளில், 'பிரம்பைக் கையாளாதவன், தன் மகனைப் பகைக்கிறான்' எனக் கூறப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் போன்ற அறிஞர்கள் அனைவருமே, ஆசிரியர்களின் பிரம்படிக்கு தப்பியிருக்க முடியாது. ஏன், இன்று 30 வயதுக்கு மேல் உள்ள அனைவருமே, ஆசிரியரின் கண்டிப்புக்கும், அடிக்கும் தப்பி இருக்க முடியாது.
இந்த நாட்டை சீர்படுத்த, நல்ல குடிமகன்கள் தேவை; அதற்கு, நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும்; அது, ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது.ஆசிரியர் மீது பாலியல் ரீதியான புகார்கள் வந்தால், உடனே அவர் மீது வெளிச்சம் பாய்ச்சி, அவமானப்படுத்தாதீர்.நன்கு விசாரித்து, குற்றம் உறுதியான பின், அவர் பற்றிய செய்திகளை வெளியிட வேண்டும். அவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாத வரை, அவர் பற்றிய தகவலை வெளியிட கூடாது.ஒருவரை பழி வாங்கும் நோக்குடனும், பழி சுமத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதனால் அவரது வாழ்க்கையே சூன்யமாகி விடுகிறது.
சமதளத்தில் 'மேன் ஹோல்!'
பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடு வோருக்கு உடனடி உதவி செய்து, அவர்களின் உயிரைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவுபவருக்கு, 5,000 ரூபாய் வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.விபத்து நடக்க பல்வேறு காரணங்கள் உண்டென்றாலும், அதிவேகமும், பதற்றமுமே முக்கிய காரணங்களாகும்.விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால், போலீசாரிடம் இருந்து தேவையற்ற கேள்விகளுக்கும், அலைச்சலுக்கும் ஆளாக வேண்டியிருக்கும் என்பதாலேயே, பலர் உதவிக்கரம் நீட்டாமல் சென்று விடுகின்றனர். மத்திய அரசின் அறிவிப்பு, அவர்களின் தயக்கத்தை உடைத்தெறிந்து, உதவிக்கரம் நீட்ட வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.இனி எந்த அச்சமும் இன்றி, நம் கண் முன்னே உயிருக்கு போராடும் நபரை காப்பாற்றலாம்.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் எங்குமே சாலையிலுள்ள, 'மேன் ஹோல்' என்ற பாதாள சாக்கடை மூடிகள் பள்ளமாகவோ, மேடாகவோ அமைக்கப்படுவதில்லை.
நம் நாட்டில், பெரும்பாலான மேன் ஹோல்கள் சாலைக்கு சமமாக அமைக்கப்படுவதே இல்லை. இதனாலேயே விபத்துகளின் எண்ணிக்கை உயர்கிறது.எனவே மத்திய - மாநில அரசுகள், நம் நாட்டில் உள்ள சாலைகளில் மேன் ஹோலை சமதளத்தில் அமைக்க உத்தரவிட வேண்டும். இது விபத்துகளின் எண்ணிக்கை குறைய வழிவகை
செய்யும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE