கரூர் தொகுதி காங்., பெண் எம்.பி., ஜோதிமணி அறிக்கை: பாகிஸ்தானை பிளந்து வங்கதேசத்தை உருவாக்கிய காளி, இந்திரா. சீனா, கேரள மாநிலம் அளவிற்கு இந்திய நிலத்தை ஆக்கிரமித்திருக்கும்போது, அதுபற்றி பேசவே அச்சப்படும் பிரதமருக்கு, முன்னாள் பிரதமர் இந்திராவின் மாபெரும் வெற்றி பயமூட்டவே செய்யும். இந்தியா இருக்கும் வரை இந்திரா இருப்பார். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.உண்மை தான். நேரு, இந்திரா, ராஜிவ் சிறப்பான பிரதமர்கள் தான். ஆனால், அந்த பதவிக்கு முயற்சிக்கும் ராகுல், சோனியா அப்படியில்லையே!
காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேச்சு: தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால், அவர்களின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளை சொல்லி, இந்த கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தேர்தல் பிரசாரம் செய்வோம்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணிக்கு இப்போதே அச்சாரம் போட்டாகி விட்டீர்கள் போலிருக்கிறதே... காங்கிரஸ்காரர்களும் சிறப்பான வியூகம் வகுப்பவர்களாக உள்ளனரே!
பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை: டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதாக இருந்தால், தோனி, ஷேவாக், கும்ப்ளே, டிராவிட், கோலி போன்றோருக்கும் கொடுக்க வேண்டி வரும். அவருக்கு இவர்கள் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை.மொத்தத்தில், டெண்டுல்கருக்கு கொடுக்கக் கூடாது என்கிறீர்கள் என்பது மட்டும் தௌிவாகிறது!
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேட்டி: பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை, 33 ஆயிரம் கோடி ரூபாய். அதில், ஆசிரியர்களின் சம்பளத்திற்கே, 31 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி விடுகிறது. மீதமுள்ள தொகையில் தான் பள்ளி வளர்ச்சி பணிகளை பார்க்க வேண்டிஉள்ளது.இதனால் தான், முந்தைய, ஜெ., தலைமையிலான, அ.தி.மு.க., அரசு ஆசிரியர்கள் சம்பளம், படிகளை குறைத்தது. ஆனால், அவர்களுக்கு ஆதரவாக, தி.மு.க., போராட்டம் நடத்தியது. இப்போது புரிகிறதா... ஆளும்அரசுக்குத் தான் சங்கடம் தெரியும்!
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: 'யுடியூப்' சமூக வலைதள புகழ் மாரிதாஸ் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அதை எதிர்த்து எந்த தி.மு.க., வழக்கறிஞரும் வாதாடவில்லை. இதை வைத்து பார்க்கும் போது, தி.மு.க., தான் உண்மையான சங் பரிவார் போல இருக்கிறது.இப்போது, இன்னொரு வழக்கில் அவரை பிடித்து, தி.மு.க., அரசு உள்ளே போட்டு விட்டதே... அதற்கு என்ன சொல்கிறீர்கள்?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE