சென்னை:''தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 28 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள, டி.எம்.எஸ்., வளாகத்தில், கர்ப்பிணியர் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி சேவைகளை குறுஞ்செய்தி வாயிலாக நினைவூட்டும் திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.பின், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் உள்ள 11 லட்சம் கர்ப்பிணியர், ஒன்பது லட்சம் குழந்தைகளுக்கு, அவர்களின் தடுப்பூசி கால அட்டவணை, குறுஞ்செய்தி வாயிலாக நினைவூட்டப்படும். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில், 14 ஆயிரத்து 868 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 70 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதில், ஐந்து பேருக்கு மறுபரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்ற முடிவு வந்ததால், அவர்கள் வீடு திரும்பினர்.மீதமுள்ள 65 பேருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தற்போது வரை, மரபணு பகுப்பாய்வு மையத்தில் இருந்து, 10 பேரின் முடிவுகள் வந்துள்ளன. அதில், ஒருவருக்கு மட்டும் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. எட்டு பேருக்கு டெல்டா வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொருவருக்கு என்ன தொற்று என உறுதி செய்யப்படாததால், அவரது மாதிரிகள் மறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.மீதமுள்ள 55 பேரில் 28 பேருக்கு, 'எஸ் ஜீன்' மாறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது.
இது ஒமைக்ரான் துவக்க நிலை அறிகுறி. இவர்களது பரிசோதனை முடிவுகள் விரைவில் தெரிய வரும்.குறைந்த ஆபத்து இல்லாத நைஜீரியா, காங்கோ நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. எனவே, இனி எல்லா வெளிநாடுகளில் இருந்தும் விமானம் வாயிலாக வருபவர்களுக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையில் தொற்று இல்லை என்றால், ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி, எட்டாவது நாளில் மீண்டும் பரிசோதனை செய்யப்படும்.
அப்போது தொற்று இல்லை என்றால் மட்டுமே வெளியில் நடமாட அனுமதிக்கப்படும். அனைத்து பயணியருக்கும் பரிசோதனை செய்ய அனுமதி கோரி, மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தி உள்ளோம். இதுவரை, ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவரின் தொடர்பில் இருந்த 278 பேரை பரிசோதனை செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE