பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி: தலைமை ஆசிரியை, ஒப்பந்ததாரர் கைது

Updated : டிச 18, 2021 | Added : டிச 17, 2021 | கருத்துகள் (26)
Advertisement
திருநெல்வேலி :திருநெல்வேலியில், சாப்டர் சி.எஸ்.ஐ., பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் நான்கு பேர் காயமுற்றனர். பள்ளி தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' கதையாக, தமிழகம் முழுதும் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய,
 பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி: தலைமை ஆசிரியை, ஒப்பந்ததாரர் கைது

திருநெல்வேலி :திருநெல்வேலியில், சாப்டர் சி.எஸ்.ஐ., பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் நான்கு பேர் காயமுற்றனர்.

பள்ளி தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' கதையாக, தமிழகம் முழுதும் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது.


திருநெல்வேலி டவுனில், மாநகராட்சி கட்டடம் அருகே கிறிஸ்துவ சி.எஸ்.ஐ., டயோசீஸ், 1818 முதல் நடத்தும் அரசு உதவி பெறும் சாப்டர் பள்ளி உள்ளது; 1,000க்கும் மேற்பட்ட
மாணவர்கள் படிக்கின்றனர்.

நேற்று காலை 11:00 மணியளவில், இடைவேளையின் போது மாணவர்கள் சிறுநீர் கழிக்கச் சென்றனர். மாணவர்கள் ஒருவரையொருவர் தள்ளியபடி நெருக்கடியாக சென்றனர். இதில் கழிப்பறையின் வெளிப்புறச் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், பல மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.இதனால், அங்குமிங்கும் மாணவர்கள் அலறி ஓடினர். இடிபாடுகளில் சிக்கியவர்களை சக மாணவர்கள் மீட்டனர். இதில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் அன்பழகன், 15, எட்டாம் வகுப்பு மாணவன் விஸ்வ ரஞ்சன், 13, சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆறாம் வகுப்பு மாணவன் சுதீஷ், 11, சிகிச்சைக்கு செல்லும் வழியில் இறந்தார்.

மேலும், காயமுற்ற மாணவர்கள் சஞ்சய், 13, இசக்கி பிரகாஷ், 14, ஷேக் அபுபக்கர், 17, அப்துல்லா, 12, ஆகியோர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சக மாணவர்கள் மூவர் இறந்த ஆத்திரத்தில் மாணவர்கள் வகுப்புகளில் பெஞ்சுகளை அடித்து உடைத்தனர். இதனால், பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. வெளியேற்றப்பட்ட மாணவர்கள், பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டபடி சென்றனர். இறப்பு தகவல் அறிந்து, பெற்றோர் பதற்றத்துடன் குவிந்தனர்.அடித்தளமில்லாத சுவர்சாப்டர் பள்ளியில், கழிப்பறை சுவர் சில ஆண்டுகளுக்கு முன் தான் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் அடித்தளம் இல்லாமல், ஒட்டுச்சுவர் போல தரையில் இருந்து எழுப்பியதால், அடியோடு பெயர்ந்து விழுந்துள்ளது.சம்பவ இடத்தை பார்வையிட்ட திருநெல்வேலி பா.ஜ., - எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், ''அடித்தளம் இல்லாமல் கட்டப்பட்டதால் தான் சுவர் இடிந்து விழுந்துள்ளது,'' என்றார்.

கட்டடம் கட்டிய ஒப்பந்ததாரர், தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் ஆய்வாளர் மாரிதுரை புகார் தெரிவித்துள்ளார்.கலெக்டர் விஷ்ணு கூறுகையில், ''அடித்தளம் இல்லாமல் சுவர் கட்டியுள்ளது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.''மாவட்டம் முழுதும் அனைத்து பள்ளிகளின் கட்டட ஸ்திரத்தன்மை குறித்து, 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து அறிக்கை தரும்படி கேட்டுள்ளோம்,'' என்றார்.இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பா.ஜ., மாவட்ட தலைவர் மகராஜன், ஹிந்து முன்னணி மாநில செயலர் குற்றாலநாதன் தலைமையில், கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் நாராயணன் தலைமையில், பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேட்டை ம.தி.தா., ஹிந்து கல்லுாரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நெல்லையப்பர் கோவில் சாலை பரபரப்பாக காணப்பட்டது.

இறந்த மாணவர்களின் உடல்கள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் உடல்களை பெற பெற்றோர் மறுத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பன், சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு, எம்.எல்.ஏ., அப்துல்வகாப் ஆகியோர் சமரச பேச்சு நடத்தினர்.
பின், உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பெற்றோர், உடல்களை பெற்று சென்றனர். நேற்று இரவு தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


நிர்வாகம் அசட்டைதிருநெல்வேலியில் சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ டயோசீஸ், அரசு உதவி பெறும் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. சி.எஸ்.ஐ., பிஷப், லே செயலர் போன்றவர்கள், தங்களது ஆதரவாளர்களுக்கு கட்டடம் கட்டும் பொறுப்பை வழங்குகின்றனர். முறையாக செய்யா விட்டாலும் கண்டுகொள்வதில்லை என எதிர் தரப்பினர் புகார் கூறுகின்றனர்.

கடந்த 2014ல் இதே பள்ளியில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் காயமுற்றனர். திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, சேவியர் காலனியில் 2015ல் கட்டப்பட்ட சி.எஸ்.ஐ., சர்ச் கூரை காங்கிரீட் தளம் சரிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் இறந்தனர்.

13 பேர் காயமுற்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை. பெருமாள்புரத்தில் உள்ள சாராள் தக்கர் மகளிர் கல்லுாரி வளாகத்தில் முகப்பு கட்டட வளைவு பணிகள் துவங்கி மூன்று ஆண்டுகள் ஆகிறது. சி.எஸ்.ஐ., நிர்வாக மாற்றத்தால் அப்பணிகளும் அந்தரத்தில் நிற்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மாணவியர் வந்து செல்கின்றனர்.வளைவு கட்டுமான பொருட்கள் கீழே விழுந்தால் மாணவியர் களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.சி.எஸ்.ஐ., டயோசீஸ் நடத்தும் டி.டி.டி.ஏ., பள்ளிக் கட்டடங்கள் பலவும் பராமரிக்கப்படாமல் உள்ளதாக சபையினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.


ஆய்வு செய்ய உத்தரவுமாநிலம் முழுதும் அனைத்து அரசு மற்றும் அரசு மேல்நிலை பள்ளிகளிலும், வகுப்பறை கட்டடம், கழிப்பறை, ஆய்வகம், நுாலகம் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டடங்களை ஆய்வு செய்வது மட்டுமின்றி, கட்டட உறுதி தன்மையை சரியான வல்லுனர்களை வைத்து ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பழுதான கட்டடங்களை பயன்படுத்தாமல், அதன் அருகில் மாணவர்கள் செல்லாமல், தடுப்பு வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இரக்கமற்ற ஆசிரியர்கள்பள்ளி மாணவர் ஒருவர் கூறியதாவது:பள்ளியில் பல ஆசிரியர்கள் கார் வைத்துள்ளனர். சுவர் இடிந்து விழுந்ததில், சுதீஷ்உயிருக்கு போராடினார். அப்போது, ஆசிரியர்களிடம், காரில் சுதீஷை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என கூறினோம். ஆனால், எந்த ஆசிரியரும் முன்வரவில்லை. அப்போதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால், சுதீஷ் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


ரூ.10 லட்சம் நிவாரணம்'இறந்த மற்றும் காயமடைந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவி தொகையை அரசு அறிவித்துள்ளது. அதேவேளையில், மூன்று மாணவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால், அந்த குடும்பம் எதிர்காலத்தை சந்திக்க முடியும்.'விபத்துக்குள்ளான பள்ளி கட்டடத்தை முழுதுமாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த பள்ளி மட்டுமல்ல; தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்' என, பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

விபத்து குறித்து தகவலறிந்த முதல்வர் ஸ்டாலின், இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், அவர்களின் குடும்பங்களுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய்; காயமடைந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு, தலா ௩ லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, உயிரிழந்த மாணவர்கள் குடும்பங்களை நேற்று இரவு சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். அதேபோல், காயமடைந்த நான்கு மாணவர்களுக்கு, தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வினாயகம் - சென்னை,இந்தியா
18-டிச-202123:10:16 IST Report Abuse
வினாயகம் @CollectorNellai @DEO_Nellai @TNschoolMin @ட்னசம் இடர்பாடுகளிலிருந்த மாணவர்களை மீட்கவும் தங்கள் வாகனங்களை தந்து மருத்துவமனை கூட்டிச் செல்லவும் மனிதாபிமானமின்றி ஆசிரியர்கள் மறுத்து உள்ளதாகவும் மனக்குமறிய மாணவர்கள் பள்ளி வளாகத்தில் கார்கள் பள்ளிச் சொத்துக்களில் கோபத்தை காட்டியதாகவும் தெரிகிறது பள்ளித் திறக்கப்படும் முன் பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் வெளிமாவட்டங்களுக்கு மாற்றம் செய்யுங்கள் மாணவர்கள் வன்மத்தால் பலியாகக் கூடாது. மேலும், தரமற்ற உட்கட்டமைப்புகளை தந்த சம்பந்தபட்ட நிர்வாகத்தின் கல்வி நிறுவனங்கள் அதன் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்குங்கள் மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றுங்கள்
Rate this:
Cancel
Arul Kumar -  ( Posted via: Dinamalar Android App )
18-டிச-202123:01:26 IST Report Abuse
Arul Kumar ஆய்வு செய்து அனுமதி அளித்திருக்க வேண்டிய அதிகாரி இதுவரை தனியார் கொடுத்த வாழப்பழங்களை சுவைத்து கொண்டு இருந்தாரா? சேவை செயய்தான் அரசாம்? யாருக்கு?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-டிச-202122:18:17 IST Report Abuse
Natarajan Ramanathan சென்னையிலுள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் படிக்கும் காயிதேமில்லத் அரசு பெண்கள் கல்லூரியில் கழிவறை வசதியே சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிடையாது என்பது தெரியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X