தரம்சாலா: நாடு கடந்த திபெத் பாராளுமன்றத்தில் நிர்வாக அரசின் புதிய பிரதமராக (கெலோன் டிரிப்பா) லாப்சங்- சாங்கே நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதற்கான பதவியேற்பு விழா தரம்சாலாவில், நாடு கடந்த திபெத் மதகுரு தலைவர் தலாய்லாமா முன்னிலையில் நடந்தது. இப்பதவியேற்பு முடிந்த பின்னர் தலாய்லாமாவே மீண்டும் மதகுருவாக செயல்படுவார் என என திபெத் அரசு நிர்வாகம் தெரிவித்தது. நேற்று நடைபெற்ற விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கலந்து கொண்டனர். திபெத் மத்திய நிர்வாகத்தின் தலைமை நீதிபதி நக்வாங்-பெஹல்ஜியால் , நாடு கடந்த புதிய பிரதமர் லாப்சங்-சாங்கேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட லாப்சங்- சாங்கேயை வாழ்த்திய பி்ன்னர் தலாய்லாமா (73) , திபெத் மொழியில் பேசியதாவது: ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட லாப்சங்- சாங்கேயிடம் இன்று முதல் திபெத் நிர்வாகத்தில் அனைத்து அரசியல் பொறுப்புக்களை ஒப்படைக்கிறேன். இனி அவர் திபெத் பாராளுமன்றத்தின் கெலோன் டிரிபா (பிரதமர் ஆவார்) என்றார். புதிய கெலோன் டிரிபா (பிரதமர்) லாப்சங்- சாங்கே (43) டார்ஜிலிங் நகரில் பிறந்தவர். டில்லியில் பள்ளி , கல்லூரிபடிப்பை முடித்தார். ஹார்வர்ட் பல்கலை.யிலும் படித்தவர்.முன்னதாக கடந்த மே மாதம் 31-ம தேதி 15 பேர் கொண்ட திபெத்திய சட்டமன்றத்தில் தற்காலிக கெலோன்டிரிபா (பிரதமர்) தேர்வு செய்யப்பட்ட சாம்டெங்- ரிம்போச்சே விலகியதைத்தொடர்நது லாப்சங்- சாங்கே பிரதமரானார். கடின உழைப்பும், தியாக மனப்பான்மையும் தான் என்னை பிரதமராக தேர்வு செய்துள்ளது என சாங்கே கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE