கோல்கட்டா : 'காங்கிரஸ் கட்சி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்., கட்சியின் கனவாக உள்ளது' என, வங்க மொழி வார இதழில் வெளியான கட்டுரை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. காங்.,கிற்கு மாற்றாக திரிணமுல் காங்.,கை உருவாக்க மம்தா எடுக்கும் முயற்சிகள் காங்., கட்சியினரை கவலையடைய வைத்துள்ளன. இந்நிலையில் வங்க மொழியில் வெளியாகும் 'ஸ்வஸ்திகா' என்ற வார இதழில் பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்., கட்சியை ஒப்பிட்டு வெளியாகி உள்ள கட்டுரை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் தொடர்புடையதாக கருதப்படும் இந்த இதழில் நிர்மால்யா முகோபாத்யாய் என்ற ஆசிரியர் கட்டுரையை எழுதி உள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஏற்கனவே இருந்த மம்தா இப்போது இல்லை. அவரது மாறுபட்ட நிலைப்பாடு அதை தெளிவாக உணர்த்துகிறது. காங்., கட்சி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் கனவு.தற்போது அதே கனவுடன் மம்தா இருப்பதாக தெரிகிறது. பா.ஜ., - திரிணமுல் காங்., இடையே நல்ல புரிதல் உள்ளதாக தோன்றுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷாமிக் பட்டாச்சார்யா கூறுகையில், “ஸ்வஸ்திகா இதழுடன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம்.எனினும் பா.ஜ.,வின் கொள்கை மற்றும் நிலைப்பாட்டிற்கு அது ஆதரவாக இருந்ததில்லை,” என்றார்.
திரிணமுல் காங்., மூத்த தலைவர் குணால் கோஷ் கூறுகையில், “பா.ஜ.,வுடன் திரிணமுல் காங்., கட்சிக்கு புரிதல் இருப்பதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்ற ஒன்று. பா.ஜ.,வுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி,” என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE