பெங்களூரு : ''அரசியல் அமைப்பு படி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அவர்கள் விரும்பும் மதத்தை கடைபிடிக்கும் உரிமை உள்ளது. இதற்கு எதிராக சட்டம் கொண்டு வருவது அரசியல் அமைப்பிற்கு புறம்பானது,'' என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மதம் மாற்றம் தடை சட்டம் கொண்டு வருவதில் பா.ஜ., அரசு மும்முரமாக உள்ளது. இது தொடர்பான சட்ட மசோதா வரும் 20 ல் சட்டசபையில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை ஆளுங்கட்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று குறிப்பிட்டதாவது: கட்டாய மதமாற்றம் தண்டனைக்குரிய குற்றம் என்று இப்போதும் அமலில் உள்ளது. புதிதாக மற்றொரு சட்டம் எதற்காக. சிறுபான்மையினரை மிரட்டி, அவருக்கு எதிராக வேண்டுமென்றே பிரச்னை செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, ஜாதி, மதம் பார்க்காமல் கிறிஸ்துவர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினரையும் ஆதரித்து வருகிறோம். யாருக்கும் தொந்திரவு ஏற்பட விட மாட்டோம்.

அரசியல் அமைப்பு படி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அவர்கள் விரும்பும் மதத்தை கடைபிடிக்கும் உரிமை உள்ளது. இதற்கு எதிராக சட்டம் கொண்டு வருவது அரசியல் அமைப்பிற்கு புறம்பானது. கிறிஸ்துவர்கள் நடத்தும் பள்ளி, கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு வேறு சமுதாயத்தினரும் செல்கின்றனர். அனைவரும் மதம் மாற்றம் செய்தில்லை. யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை.
பா.ஜ., ஆட்சியில் தேவாலயம் மீது தாக்குதல் நடக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் அதற்கு வாய்ப்பு தரவில்லை. கர்நாடக அரசு கொண்டு வர முற்பட்டுள்ள மதம் மாற்றம் தடை சட்டம் கொண்டு வருவதன் பின்னணியில் மக்கள் நலன் இல்லை. நாட்டில் மத பிரச்னை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.