புதுடில்லி: 2021-ம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்திற்கான இறுதிப் போட்டி, கரீபீயன் தீவில், அமெரிக்காவிற்கு சொந்தமான போர்டா ரீகோ தீவில் ஆரம்பமாக இருந்த நிலையில், பங்கேற்ற அழகிகள் பலருக்கு கோவிட் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.

'மிஸ் வேர்ல்ட் 2021' எனப்படும் இந்த அழகிப் போட்டி போர்டா ரீகோ தீவில் நடைபெற இருந்தது. நிகழ்வில் பங்கேற்ற 17 மாடல்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதில் இந்தியாவைச் சேர்ந்த மானசா வாரணாசி என்பவரும் அடக்கம். உலக அழகிப் பட்டத்தை வெல்லப் போவது யார் என பேஷன் உலகம் தெரிந்துகொள்ள ஆவலாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இது தொடர்பாக மிஸ் வேர்ல்டு ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: நிகழ்ச்சியில் பங்கேற்றபவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் உடல்நலனில் அக்கறைக் கொண்டு இறுதிப் போட்டியை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். மீண்டும் இறுதிப்போட்டி அடுத்த 90 நாட்களுக்குள் திட்டமிடப்படும். இந்நிகழ்ச்சிக்காக பணியமர்த்தப்பட்ட வைராலஜிஸ்டுகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் விவாதித்தோம். பின்னர்போர்டா ரீகோ சுகாதாரத் துறையுடன் பேசி இதனை அறிவிக்கிறோம். டிரஸிங் அறை மற்றும் மேடைகளில் கொரோனா தொற்று பரவியிருக்கலாம். இவ்வாறு கூறியுள்ளனர்.