புதுடில்லி : வர்த்தக ரீதியில் வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெறுவதை தடை செய்யும் சட்ட திருத்த மசோதா, பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது. வர்த்தக ரீதியில் வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறுவதற்கு எதிராக பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

இதையடுத்து வர்த்தக ரீதியில் வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறுவதை தடுக்க வாடகை தாய் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து லோக்சபாவில் 2019ல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து இந்த மசோதா ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்டது. உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று இந்த மசோதாவை தேர்வு குழுவுக்கு ராஜ்யசபா அனுப்பியது.இந்த மசோதாவில் சில மாற்றங்களை செய்யும்படி தேர்வுக்குழு பரிந்துரைத்தது.

இதையேற்று, மசோதாவில் மத்திய அரசு சில திருத்தங்கள் செய்தது. கடந்த 19ல் வாடகை தாய் சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த மசோதாவில், 'தேசிய வாடகை தாய் வாரியம், மாநில வாடகை தாய் வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
மேலும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் இந்த முறையில் குழந்தை பெறுவதை இந்த சட்ட திருத்தம் தடுக்கிறது. வாடகைத் தாய் முறையை தவறாக பயன்படுத்துவோரை தண்டிக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE