பெங்களூரு : சசிகலாவுக்கு சிறையில் சலுகை அளிக்க லஞ்சம் வாங்கிய வழக்கில் தவறு செய்த அதிகாரிகள் மீதான இறுதி விசாரணை அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய, கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழி சசிகலா, இளவரசி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த போது, சொகுசு வசதி செய்து கொடுப்பதற்கு, சிறைத்துறை அதிகாரிகள், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த வழக்கில் ஏ.சி.பி., என்ற ஊழல் ஒழிப்பு போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை.
வழக்கு தாமதமாவதால் சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணையின் போது, 'ஏ.சி.பி.,யினர் உரிய விசாரணை நடத்தவில்லை' என, நீதிமன்றம் பலமுறை அதிருப்தி தெரிவித்தது.
கடந்த நவம்பரில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'கர்நாடக உள்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டு, டிசம்பர் 16க்கு ஒத்தி வைத்தது. இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான முதன்மை அமர்வு முன், நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.

அரசு வக்கீல் வாதாடுகையில், 'லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணை முடித்து விட்டனர். தவறு செய்தவர்களிடம் விசாரணை நடத்த முன் அனுமதி கேட்டு, 2021 ஜூலையில், உள்துறை செயலருக்கு அனுமதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.'இதை 20 நாட்களுக்கு முன்பே, உள்துறை செயலர் பரிசீலித்து, உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்' என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜ்குமார் கூறியதாவது: இறுதி அறிக்கையை இரண்டு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது. அறிக்கை அளிக்க அரசு தரப்பில், செப்டம்பர் 7ல் மீண்டும் 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டது. அறிக்கை அளிக்க தாமதமானால், உள்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஆனாலும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி, 'மனுவின் மீது நடவடிக்கை எடுக்க இன்னும் எத்தனை நாள் கால அவகாசம் வேண்டும்?' எனக் கேட்டார். அரசு தரப்பு வக்கீல், 'தற்போது பெலகாவியில் குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. உள்துறை அமைச்சர் அங்குள்ளார். இரு வாரங்களுக்கு பின் வருவார். அதற்குள் அவர் அனுமதி பெற்று முழுமையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்' எனத் தெரிவித்தார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE