திருப்பூர்: ''தமிழகத்தில் விடியல் ஆட்சி நடப்பதாக நடிக்கின்றனர்; வீடியோ அரசு தான் நடந்து கொண்டிருக்கிறது,'' என, அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் அருகில், நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியாளரின் நடிப்பால், அவர்களாகவே ஆட்சியை விட்டு போய்விடுவர்கள். இல்லையெனில், மக்கள் அகற்றிவிடுவர். பொய் பொய்யாக சொல்லி, விடியல் ஆட்சி நடப்பதாக நடிக்கின்றனர்; தமிழகத்தில் வீடியோ அரசு தான் நடந்து கொண்டிருக்கிறது. சினிமா நடிப்பும், 'டிவி' நடிப்பும் எடுபடவில்லை. அதனால், ஸ்டாலின் முதல்வராக நடித்து கொண்டிருக்கிறார்.
அ.தி.மு.க., ஆட்சியில், 12 ஆயிரத்து, 110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து, உத்தரவை வழங்கினோம்; இல்லாவிட்டால், அதுவும் தற்போது கிடைத்திருக்காது.பொய் வழக்குகளால், அ.தி.மு.க., வினரை மிரட்டி வருகின்றனர். எம்.ஜி.ஆர்., - ஜெ., தொண்டர்கள், எவ்வித மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டோம். இவ்வாறு, அவர் பேசினார்.