முக்கிய சாலையில் அமைந்துள்ள சிறு திருமண மண்டபம்; பிறந்த நாள் விழா போலும். ஒருவரோடு ஒருவர் ஒட்டிக்கொண்டு, கும்பலாக நின்று, மகிழ்ச்சியோடு அளவளாவிக் கொண்டிருந்தனர்.சந்தோஷம் பொங்கி வழிந்த அவர்களது முகங்களில், முக கவசம் அணிந்திருந்தால் அது யாதொரு சங்கடமும் விளைவிக்கப் போவதில்லை. ஆனாலும், மருந்துக்கு கூட ஒருவர் முகத்திலும் முக கவசமில்லை; சுத்தமாக மறந்து விட்டிருந்தனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் சமீபத்தில் கூறியது நினைவில் நிழலாடியது... 'உங்கள் நாட்டு மருத்துவமனைகள் நிரம்பி வழியும் வரை காத்திருக்காதீர்கள். கொரோனாவின் புதிய உருமாற்றமான, 'ஒமைக்ரான்' மிக வேகமாக பரவுகிறது. 77 நாடுகளில் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'மற்ற நாடுகளிலும் இல்லையென்றில்லை; இன்னும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது' என, தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை, 2021 ஏப்ரலில் துவங்கி, மே, ஜூன் வரை நீடித்தது. பின் படிப்படியாக குறைந்து, மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடத் துவங்கினர். இனி ஒரு அலை வருவதற்கான வாய்ப்பு இல்லை என்ற அலட்சியம் பலருடைய மனதில் அரும்பிக் கொண்டிருந்த நேரம். நவம்பர் 24, 2021. திடீரென உலக சுகாதார நிறுவனத்தின் ஒலிபெருக்கிகள் அலறின.
'மிக வீரியம் மிக்க பலமான, எதிரியான ஒமைக்ரான் தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. அனைவரும் கவனமாக இருங்கள். உங்கள் மக்களை காத்துக் கொள்ளுங்கள்' என்பது தான். உலக சுகாதார நிறுவனத்தின் அந்த கூட்டம் முடிவதற்குள்ளாகவே, செய்தி எல்லா நாடுகளிலும் தீயென பரவியது. அனைத்து நாடுகளும் கொஞ்ச நாளைக்கு, 'நீ உன் நாட்டைத்தாண்டி வர வேண்டாம்; நாங்களும் இந்த கோட்டைத்தாண்டி உங்க நாட்டுக்குள் வர மாட்டோம்' என்று தென்ஆப்ரிக்காவை தனிமைப்படுத்தின.
இன்னும் சில நாடுகள், தென் ஆப்ரிக்கா மற்றும் ஒரு சில நாடுகளை வரிசைப்படுத்தி, 'அங்கிருந்து வருவோர் கட்டாயம் தனிமைப் படுத்தப்பட வேண்டும்' என்று விதிகள் வகுத்தன. 'நாங்கள் அறிவியலில் முன்னேறி இருப்பதால், விரைவாக கொரோனா உருமாற்றத்தை கண்டுபிடித்தோம். 'அத்தோடு உலக மக்களின் நலன் கருதி அதை உடனடியாக நாங்கள் உலகுக்கு அறிவித்ததற்கு எங்களுக்கு கிடைத்த தண்டனையா இது?' என்று தென் ஆப்ரிக்கா பலவாறு புலம்பியது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு விசித்திரத்தை பார்க்கலாம். நீங்கள் சென்னையில் இருந்து பெங்களூரு போவதற்காகவோ அல்லது திருவள்ளூர் மார்க்கமாக வேறு ஊருக்கு போகிறவர்களாகவோ இருந்தால், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் உங்களையும், உங்கள் உடமைகளையும், 'ஸ்கேனரில்' சோதிப்பது உட்பட பலவித சோதனைகள் செய்வர். ஆனால், அதே ரயில் கொஞ்ச துாரம் ஓடி திருவள்ளூரில் நின்றால், கேட்பார், சோதிப்பார் யாருமின்றி பயணியர் ஏறுவர். அதாவது, 'பயங்கரவாதிகளுக்கு சென்ட்ரல் புகைவண்டி நிலையம் மட்டும் தான் பிடிக்கும்; தெரியும். அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் ஏற மாட்டார்கள்' என்பது அந்த அசட்டை அதிகாரிகளின் எண்ணம் போலும்.
அது போல,தென்ஆப்ரிக்காவை தடை செய்தாலும், அதன் நட்பு நாடுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டதன் எதிரொலி, தென் ஆப்ரிக்காவில் இருந்து நேரடியாக வராமல் நட்பு நாடுகளுக்கு சுற்றி வந்தவர்களின் காரணமாக இந்த ஒமைக்ரான், 77 நாடுகளுக்கு இப்போது பரவியாயிற்று. அவ்வளவு ஏன்... இந்தியாவிற்குள்ளும் நுழைந்து, சென்னை விமான நிலையத்திலும் குடும்பத்துடன் வந்து இறங்கி விட்டது; ஒன்று, இரண்டு என, நினைத்து நினைத்து அரசு அறிவிக்கிறது.
எவ்வளவு பேர் ஒமைக்ரானுடன் இருக்கின்றனர் என்பதை வெளியில் சொல்வதற்கில்லை போலிருக்கிறது.மஹாராஷ்டிராவிலும், டில்லியிலும் அதிகளவு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இங்கு கொரோனா நெறிமுறைகள் கடைப் பிடிப்பது கடுமையாக்கப்பட்டுள்ளது. பீஹார் மாநிலம் பாட்னா அரசு மருத்துவமனையில், ஒமைக்ரான் தனி வார்டே திறக்கப்பட்டாயிற்று.
'சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டை சுத்தம் செய்து வையுங்க...' என்று வாய் வார்த்தையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வளவும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், டிசம்பர் மாத இசைக் கச்சேரிகளுக்கும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தயாராகிக் கொண்டு இருக்கிறோம். அதே போல, இன்னொரு வேடிக்கையும் நடந்து கொண்டிருக்கிறது.
'டாக்டர் எனக்கு காய்ச்சல் உள்ளிட்ட எல்லா கொரோனா அறிகுறிகளும் உள்ளன. தயவுசெய்து மருந்து தாருங்கள்' என்கின்றனர். டாக்டரும் சோதித்து பார்த்துவிட்டு, 'ஆமாம் உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ்' என்கிறார் கவலையோடு. ஆனால் நோயாளியோ, 'நல்லவேளை டாக்டர்... நான் கூட எங்கே எனக்கு ஒமைக்ரான் வந்து விட்டதோ என நினைத்து பயந்திருந்தேன். வந்திருப்பது கொரோனா தானே...' என சந்தோஷப்பட்டார்.
'வந்திருப்பது ஒமைக்ரானாக கூட இருக்கலாம். ரொம்ப துள்ளாமல், வேண்டிய சிகிக்சைகளை உடனே எடுத்துக்கொள்ளுங்கள். 'சொந்த வைத்தியம் மட்டுமே போதும்' என நினைத்து, வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் தொற்று பரவலை ஏற்படுத்தாதீர்கள்' என்று எச்சரிக்க வேண்டி இருக்கிறது.
ஏனெனில், ஒமைக்ரானில் பயப்பட வேண்டிய முக்கிய அம்சம், அது வேகமாக பரவும் என்பது தான்.நவம்பர், 2021 பெங்களூரில் இதயநோய் நிபுணர்களுக்கான கூட்டம். வெகுநாட்கள் கழித்து ஒரு கூட்டத்தில் நேரடியாக பங்கேற்க வாய்ப்பு என்று பல மருத்துவர்களும் சென்றிருந்தனர். சென்று வந்த மருத்துவர்களில் ஒருவருக்கு காய்ச்சல்.
பின் அவருடன் சென்றிருந்த மற்ற இரண்டு மருத்துவர்களுக்கும் அடுத்தடுத்த நாட்களில் காய்ச்சலும் இருமலும் வந்தது.கொரோனாவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் பரிசோதித்ததில், 'கொரோனா பாசிட்டிவ்' என்று காட்டியது. ஒமைக்ரானுக்கான மரபணு வரிசை பரிசோதனையில் அது, ஒமைக்ரான் என்பதையும் உறுதி செய்தது.அடுத்தடுத்து பல நாடுகளும், ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தங்கள் நாடுகளிலும் பரவி இருப்பதை உறுதி செய்தன.
யாரிந்த ஒமைக்ரான்?
விஞ்ஞானிகளே ஆச்சரியப்படும் அளவிலும், விதத்திலும், இதுவரை இல்லாத அளவிற்கு மாற்றங்களின் தலைவனாக, 52 விதமான திரிபுகளோடு கவலைப்படத்தக்க உருமாற்றமாக உள்ளது. இது, கிரேக்க மொழியில், 14வது எழுத்தில் பெயரிடப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலான உருமாற்றங்கள் அதன் முள் புரதத்தில் காணப்படுவதால் நம் உடலில் சென்று ஒட்டிக்கொண்டு நோயை உண்டாக்கும் சக்தி பலமடங்கு இருப்பதாகக் கணிக்கின்றனர்.
எப்படி தோன்றியது?
ஆராய்ச்சியில் எதிர்ப்பு சக்தி குறைந்த ஒருவருக்கு, சாதாரணமான ப்ளூ மாதிரியான சளிக்காய்ச்சல் ஏற்படுத்தக்கூடிய வைரசும், கொரோனா வைரசும் ஒன்றாக தாக்கி இருக்கலாம். அப்போது இந்த வைரஸ்களுக்கு இடையே மரபணு பரிமாற்றம் ஏற்பட்டு, இதுபோன்ற ஒரு புதிய ஒரு மாற்றத்தை உண்டாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்ரிக்காவில் தடுப்பூசி தயக்கம் மிக அதிகமாக உள்ளது. தடுப்பூசிகள் அங்கு இலவசம் இல்லை.இங்கு, 30 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி தயக்கமும் இதுபோன்ற வலிமையான மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.
பலம், பலவீனம் என்ன?
டெல்டா வைரசை விட ஆறு மடங்கு அதிகமாக பரவக்கூடிய பலம் வாய்ந்ததாக, ஒமைக்ரான் இருக்கிறது. ஏற்கனவே கொரோனா வந்தவர்களுக்கும் வருகிறது; இரண்டு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கும் வருகிறது. ஆனால், இதன் முக்கியமான ஒரு பலவீனம், இதன் நோய் உண்டாக்கும் தன்மை தீவிரமாக இல்லை. மிகவும் லேசான அறிகுறிகளை கொண்ட தொற்றாக இருப்பதாகவே இதுவரை வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
அறிகுறிகள் என்ன?
லேசான காய்ச்சல், தொண்டை வலி, கரகரப்பு, இருமல் போன்றவையே அறிகுறிகளாக உள்ளன. நுகர்வு இழத்தல் சுவைஇழத்தல் போன்ற அறிகுறிகளை உண்டாக்கவில்லை. நுரையீரல் பாதிப்படைந்தவர்களுக்கு ஆக்சிஜன் தேவையும் கூட குறைவாகவே உள்ளது.கொரோனா, குறிப்பாக இந்த வயதில் உள்ளவர்களை அதிகமாக தாக்குகிறது என்று எந்தவிதமான தரவுகளும் இல்லை.
ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் தடுப்பூசி போடாத, 18 வயதுக்கு கீழே உள்ளவர்களிடம் அதிகமாக பரவலாம். இப்போது குழந்தைகள் வெளியே சென்று வருவதாலும், இதுவரை வந்த அலைகளில் அதிகமாக பாதிக்கப்படாததாலும், 'மாஸ்க்' முதலிய கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை குழந்தைகள் தீவிரமாக பின்பற்ற முடியாது என்பதாலும், அவர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது.
எது காப்பாற்றும்?
இதுவரை, பிரிட்டனிலிருந்து மட்டும் ஒரே ஒருவர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் இறந்ததாக தரவுகள் உள்ளன. தடுப்பூசி செலுத்தி கொள்வதும், கொரோனாவுக்கான நெறிமுறைகளை பின்பற்றுவதும் மட்டுமே காப்பாற்றும்.
தடுப்பூசி தடுக்குமா?
தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் ஒமைக்ரான் தொற்று ஏற்படலாம் என்றாலும், ஒரு உண்மை மறுக்க முடியாதது, 'உள்ளங்கை நெல்லிக்கனி'யென தெரிவது, 'தடுப்பூசிகள் தீவிரமான கொரோனா தொற்றிலிருந்து கட்டாயம் பாதுகாக்கும். இரண்டு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களை கொரோனா வந்தாலும், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இறப்பிலிருந்து காப்பாற்றி விடும்' என்பதாகும்.இது எல்லா தடுப்பூசிகளுக்கும் பொருந்தும். மேலும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
சிகிச்சை என்ன?
மற்ற கொரோனாவுக்குரிய சிகிச்சை தான் இதற்கும். தொற்றின் தீவிரம் அதிகமாக இல்லை என்பதால், பெரும்பாலும் தனிமைப்படுத்துதல் போதுமானதாக உள்ளது. இரண்டு மாத்திரைகள் கொரோனா சிகிச்சைக்காக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. 'மோல்னுபிரவிர்' மற்றும் 'பேக்சல்லாவிட்' என்பனவே அவை. ஆரம்ப கட்டத்திலேயே எடுத்துக்கொள்ளும் போது, நோய்த்தொற்றின் வீரியத்தை, 80 சதவீதம் வரை குறைப்பதாக கூறப்படுகிறது.
3ம் அலை ஏற்படுத்துமா?
பிரிட்டனில் நடந்த ஆராய்ச்சியில், ஜனவரி மற்றும் பிப்ரவரியில் மிகப்பெரிய அலையை ஒமைக்ரான் ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் தினமும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றும், அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றும் கண்டறியப்படுகிறது.ஒமைக்ரான் உருமாற்றம், 'தீயிலிட்ட பெட்ரோல்' போல மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம், அந்த நாடுகளில் நிலவுவதால் மீண்டும் கட்டாயமாக முக கவசம் அணிதல், பகுதி நேர ஊரடங்கு ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை, ஏற்கனவே டெல்டா வைரஸ், அதிகமான நபர்களை பாதித்ததால் உண்டான எதிர்ப்பு சக்தியும், 80 சதவீதம் வரை பல மாநிலங்களில் தடுப்பு ஊசி செலுத்தி இருப்பதாலும், தீவிரம் மிகக் கடுமையாக இருக்காது என்று நம்பினாலும், ஒமைக்ரானின் பரவும் தன்மையும், வேகமும் கவலை அளிப்பதாகவே உள்ளது.
அதற்கு ஏற்றாற்போல மக்களுடைய மனப்பான்மையும் மாறிவிட்டது. மாஸ்க் அணிவதில் ஏற்படும் சுணக்கமும்,தெருவிலேயே ஆங்காங்கு எச்சில் துப்புவதும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதும், ஒமைக்ரான் பரவ நல்ல தளத்தை ஏற்படுத்திக் கொடுத்து விடுமோ என்ற பயமும் வருகிறது.
வருமுன் காப்போம்
மனித குலம் ஒன்று திரண்டு, ஒரு அணியாக நின்று, கொரோனாவை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.மொத்த ஆப்ரிக்காவில் 5 -- 10 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு காரணம் அவர்களிடம் தடுப்பூசிகள் இல்லை. அதனால் தடுப்பூசிகள் அதிகம் வைத்துள்ள நாடுகள், மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசிகளை பரிமாறிக் கொள்வது, இதுபோன்ற உருமாற்றங்கள் மீண்டும் வராமல் தடுக்கலாம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனவர்களில் பெரும்பாலானோர், இரண்டு தடுப்பூசி போடாதவர்கள் அல்லது ஒரு தடுப்பூசி மட்டுமே போட்டவர்கள் தான்.'எனக்கு இதுவரை எந்த நோயும் வந்ததில்லை; எனக்கு தடுப்பூசி தேவைஇல்லை' என்று நினைத்தவர்களும், தடுப்பூசிக்கு எதிராக பேசியவர்களும், 'நான் வீட்டில் தான் இருக்கிறேன் எனக்கு எதற்கு தடுப்பூசி?' என்று கேட்டவர்களும் கொரோனா முன் நிற்க முடியாமல் சரிந்து போனதை, முதல் இரண்டு அலைகளில் கண்கூடாக பார்த்தோம்.
மிக வேகமாக பரவும் ஒமைக்ரானிடம் கவனமாக இருங்கள்; எச்சரிக்கையாக இருங்கள். இன்னொரு முழு ஊரடங்கை நாம் போட்டால், நம் பொருளாதாரத்தால் கட்டாயம் சமாளிக்க முடியாது. அதற்குரிய அவசியத்தையும், சூழ்நிலையையும் ஏற்படுத்தாமல் இருப்பது நம் கையில் தான் இருக்கிறது.
முக கவசம் அணியுங்கள்; சமூக இடைவெளியையும், தனிமனித இடைவெளியையும் கடைப்பிடியுங்கள்; காற்றோட்டமுள்ள இடங்களையே தேர்ந்தெடுங்கள்; தடுப்பூசி செலுத்தாதவர்கள் முன்வந்து செலுத்திக் கொள்ளுங்கள்.எல்லாம் கடந்து போவது போல, இந்த ஒமைக்ரானும் கடந்து போகும். இன்னும் சிறிது நாளைக்கு மனம், உடல் சிரமப்படுவதை பொறுத்து பொறுமையாக இருந்தால், சந்ததியோடு பின், சந்தோஷமாக இருக்கலாம்!
தொடர்புக்கு:
டாக்டர்
ஜெயஸ்ரீ ஷர்மா
doctorjsharma@gmail.com