'மிஷன் சம்ரிதி' அமைப்பின் செயல் இயக்குனர், ராம் பப்பு: தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்க, ௧௯௫௦ல் ஐ.ஐ.டி.,களை உருவாக்கினோம். நிர்வாகிகளை உருவாக்க, 1௯௬௦ல் ஐ.ஐ.எம்., களைத் துவங்கினோம். 'இந்தியாவின் ஆன்மா' என்று சொல்லப்படும் கிராம பஞ்சாயத்துகளை நிர்வகிக்க, நம்மிடம் எந்த அமைப்பும் இல்லை. ஐ.ஐ.பி.எம்., என்ற 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பஞ்சாயத்து மேனேஜ்மென்ட்' உருவாக்கப்பட வேண்டும்.
கிராமங்களின் அடிநாதமாக இருக்கும் விவசாயிகள், பொருளாதார நிலையில் வலுப்பெற வேண்டும் எனில், விவசாயம் லாபகரமானதாக இருக்க வேண்டும். அதற்கு, செலவு குறைந்த இயற்கை வேளாண்மை தான் ஒரே வழி! ஆனால், இதிலும் முக்கிய சிக்கல் ஒன்று உள்ளது.
நம் விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைவித்தாலும், உரிய விலை கிடைப்பதில்லை. இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இப்படி இருப்பது என, இதற்கான தீர்வுகளைத் தேடி, களத்தில் இறங்கினோம். நம் நாட்டை பொறுத்தவரை, அரசு துறைகள் ஒரு பக்கமும், ஆராய்ச்சி நிலையங்கள் இன்னொரு பக்கமும், மக்களுடன் இணைந்து பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் வேறு பக்கமும் திரும்பி நிற்கின்றன.
இவை மூன்றையும் ஒரே திசையில் திருப்பி, மாற்றத்தை உருவாக்கும் பணியை தான், 'மிஷன் சம்ரிதி' மூலம் செய்து வருகிறோம்.தென்மாநிலங்களுக்காக, 'தக் ஷின் சமகம்' என்ற சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம். இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு உரிய விலை கொடுக்கவும், நஞ்சில்லா உணவை மக்களுக்கு அளிக்கவும் என்னவெல்லாம் செய்யலாம் என்று சிந்தனையைத் துவங்கியுள்ளோம்.
இன்னும் பல நிகழ்ச்சி களையும், பயிலரங்குகளையும் நடத்தவுள்ளோம். குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயி, கூட்டுறவு அமைப்பு மூலம் பாலை விற்பனைக்குக் கொடுக்கிறார். ஒரு லிட்டர் பால், 58ரூபாய்க்கு நகரத்தில் விற்பனை செய்கின்றனர். இதில்,49 ரூபாய் விவசாயிக்கு நேரடியாக கிடைக்கிறது. இதன் மூலம் பல லட்சாதிபதிகளை, கோடீஸ்வரர்களை, 'அமுல்' கூட்டுறவு நிறுவனம் உருவாக்கி வருகிறது.
இதன் முதலாளிகள் பால் கொடுக்கும் விவசாயிகள் தாம்! உலக அளவில் விவசாயிகளால் லாபகரமாக நடத்தப்படும் அமைப்பு இதுதான். இதற்குக் காரணம், அங்கு சரியான கூட்டுறவு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. இது போல, இயற்கை வேளாண்மை விளைபொருள்கள் விற்பனைக்கும் உருவாக்க முடியும்; அதற்கான அத்தனை தகுதிகளும், திறமையும் நம்மிடம் உண்டு. நல்ல மாற்றம் உருவாக்க காலம் கனிந்து விட்டது.
குடும்ப பட்ஜெட் போடுவது அவசியம்!
நிதி ஆலோசகர் அனிதா பட்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் பட்ஜெட் மிகவும் முக்கியமானது. ஆனால், இன்று நாட்டின் பட்ஜெட் மீது இருக்கும் அக்கறை கூட, பலருக்கு அவரவர் வீட்டின் பட்ஜெட் மீது இருப்பதில்லை.அவசரகால நிதி சேமிப்பு தான் நிதித் திட்டமிடலின் முதல் படி.
ஒருவருக்கு வேலை இழப்பு ஏற்பட்டாலோ, ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு வருமானம் ஈட்ட முடியாத நிலை உருவானாலோ, மருத்துவ தேவைகளுக்காக நீண்ட விடுமுறை எடுக்க நேர்ந்தாலோ, அந்தக் காலகட்டத்தில் குடும்பத்துக்குத் தேவைப்படும் நிதியை, முன்னரே சேமித்து வைப்பது தான் இந்த அவசரகால நிதி!
குறைந்தபட்சம், 6 - 12 மாதங்களுக்கான மொத்த தொகையையும் அவசர கால நிதியாகச் சேமித்து வைக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு மாதம், 20 ஆயிரம் ரூபாய் அத்தியாவசிய செலவு தொகையாகக் கொண்டால், அவர் குறைந்தபட்சம்1.20 லட்சம் ரூபாய், அதிகபட்சம் 2.40 லட்சம் ரூபாயை பிக்சட் டெபாசிட் அல்லது 'லிக்விட் மியூச்சுவல் பண்டு'களில் சேமித்து வைத்துக் கொள்வது நல்லது.
கொரோனாவால் அதிகரித்திருக்கும் மருத்துவச் செலவுகள், இன்று இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்பதை உணர்த்தியிருக்கின்றன. உதாரணத்துக்கு, ஒருவருடைய ஆண்டு சம்பளம், ௫ லட்சம் ரூபாய் எனக் கொண்டால், குறைந்த பட்சம், ௫௦ லட்சம் ரூபாய், 'டேர்ம் இன்சூரன்ஸ்' எடுத்துக் கொள்ளலாம். குறைந்த வயதுள்ளவர்கள் இந்த பாலிசியை எடுக்கும்போது, இதற்கான பிரீமியம் மிக மிகக் குறைவாக இருக்கும்.
அதேபோலத் தான் ஹெல்த் இன்சூரன்சும். நான்கு உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்துக்கு, குறைந்தபட்சம், ௧௦ லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட பாலிசி எடுக்க வேண்டியது அவசியம். குழந்தைகளின் மேற்படிப்பு, அவர்களின் திருமணம், சொந்த வீடு, ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா, ஓய்வுக்காலம் என நம் ஒவ்வொருவருக்கும் பல எதிர்கால தேவைகள் இருக்கும்.
குறுகிய காலத்தில் அடைய வேண்டிய தேவைகள் எவை, நீண்டகாலத்தில் அடைய தேவைகள் எவை என்கிற கால அளவை நிர்ணயம் செய்து, அதன் பின், முதலீட்டுக்கான விஷயங்களை ஆரம்பியுங்கள்.ஒருவர் தன் சம்பளத்தில், 30 சதவீத தொகையை சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்காக ஒதுக்க வேண்டும் என்பது நியதி. மீதமிருக்கும் 70 சதவீதத்தில், 40 சதவீதம் கடனுக்கான, இ.எம்.ஐ., செலுத்துவதற்கு, மீதி இருக்கும் 30 சதவீதம் அன்றாட தேவைகளுக்கு எனப் பிரித்துக் கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE