ஜி.சூர்யநாராயணன், விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆங்கில புத்தாண்டு என்பது, ஓர் இடைச் செருகல் என்பதை தி.மு.க.,வினர் உட்பட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
'செப்டா, ஆக்டா, நவ, டெசி' என்ற லத்தின் குறியீட்டை பயன்படுத்தி தான், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய ஆங்கில மாதங்கள் பெயரிடப்பட்டன.மேலும், முன் காலத்தில் ஆங்கில ஆண்டு என்பது, 30 நாட்களை உடைய, 10 மாதங்களே!
நம் நாட்டின் வான சாஸ்திரம், மிகவும் பிரசித்த பெற்றது. நம்மிடம் இருந்து கால கணித அறிவு பெற்ற மேலை நாட்டினர், ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் உருவாக்கினர். அதிலும், பிப்ரவரிக்கு 28 அல்லது 29 நாட்கள் என குளறுபடி செய்து, 'லீப் ஆண்டு' என்ற ஒன்றை உருவாக்கி, இன்றும் தகிடுதத்தம் போடுகின்றனர்.
நம் பாரம்பரிய கால அறிவு, மிக துல்லியமானது. ஆண்டு கணக்கு, சித்திரையில் துவங்கி, பங்குனியில் நிறைவடையும். வான சாஸ்திரபடி மேஷத்தில் துவங்கி, மீனத்தில் முடியும்.இதில் என்ன முக்கிய அம்சம் என்றால், பூமி, சூரியனை சுற்றி வரும் அறிவியல் நாள் கணக்கும், நம் பாரம்பரிய ஆண்டு கணக்கும் பிறழாமல் வருகிறது.
உலகில், 365.25 நாள் உடைய ஆண்டு கணக்கை பின்பற்றுவது, நம் பாரத பண்பாடே!நம் முன்னோர் சொன்னபடி மழை, வெயில், குளிர், காற்று காலங்கள் பல லட்சம் ஆண்டுகளாக சரியாக இருக்கிறது.இதை பறை சாற்றும் பஞ்சாங்கத்தில் உள்ள சந்திர, சூரிய கிரகணங்களும், மிக துல்லியமாக இருக்கிறது.நம் பாரம்பரிய கால கணிதத்தை பாராட்ட மனம் இல்லை என்றாலும், அதற்கு பங்கம் வருவது போல் நடக்கக் கூடாது.
சித்திரை முதல் நாள், தமிழ் புத்தாண்டு என்பது, இந்த நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரம் சார்ந்தது. இதில் மூக்கை நுழைக்கும் அதிகாரம் அரசியல், ஜாதி மற்றும் மதவாத சக்திகளுக்கு கிடையாது.தை முதல் நாளை புத்தாண்டாக மாற்றினால் நாளை, 'ஐ' என்று வருவதால், ஐப்பசி தான் தமிழ் புத்தாண்டு... அப்படி இல்லை, 'ஆ' வருவதால் ஆனி தான் தமிழ் புத்தாண்டு என, ஆளாளுக்கு குதிக்க துவங்கி விடுவர்.
ஜாகிர் உசேன்ஒரு சிறந்தவைணவர்!
பி.என்.கபாலி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேனை, ஸ்ரீரங்கம் கோவிலில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்து நெட்டித் தள்ளியதாக வந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
தலைசிறந்த நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமணியத்தின் மாணவரான ஜாகிர் உசேன் பிறப்பால் இஸ்லாமியராக இருக்கலாம்; ஆனால், வாழும் முறையால் அப்பழுக்கற்ற வைணவர். மிகவும் கண்ணியமானவர்; வைணவ இலக்கியங்களை நன்கு கற்றவர்.வைணவ சித்தாந்தங்களை அழகு தமிழில் ஆற்றொழுக்கு போன்ற நடையில் அனைவருக்கும் விளங்கும் வண்ணம் சொற்பொழிவாற்றும் திறனுடையவர்.
அவருடைய வைணவ பக்தி சர்ச்சைக்கு அப்பாற்பட்டது. அரங்கனை தரிசிக்க, மற்ற எவரையும் விட தகுதி வாய்ந்தவர் அவர்.அப்படிப்பட்ட ஜாகிர் உசேனை, ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க விடாமல் தடுத்தது தவறான செயல்.நெற்றி நிறைய திருமண்ணுடன் வலம் வரும் ரங்கராஜன் நரசிம்மன், வைணவராக செயல்படவில்லை.
ஜாகிர் உசேனை, ரங்கநாதரை தரிசிக்கவிடாமல் தடுத்தது ஏற்புடையது அல்ல. இவ்விஷயத்தில் தவறு இழைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சி மாறினாலும் கதை மாறாது!
எம்.அசோகன், எட்டையபுரம், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்திற்கு என தனியான ஒரு தலை எழுத்து உண்டு. தி.மு.க., அல்லது அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்றை தான், ஆட்சி நடத்த மக்கள் அனுமதிப்பர்.இந்த இரண்டு கழகங்களுக்கு மாற்றாக, ஒரு அரசியல் கட்சி தமிழகத்தில் இதுவரை உருவாகவில்லை என்பதே, தமிழகத்திற்கு கிடைத்த சாபம்.
'வாட்ஸ் ஆப்' வழியே ஒரு, 'மீம்ஸ்' பரவி வருகிறது.அதாவது, உ.பி.,யில் உள்ள ஒரு கிராமத்தில், ஏழையின் குடிசைக்குள் மூதாட்டியும், காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவும் அமர்ந்துள்ளனர்.பிரியங்கா, அந்த மூதாட்டியிடம், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உங்கள் வறுமை ஒழிந்து விடும்' என்கிறார்.அதற்கு அந்த மூதாட்டி, 'முதலில் உன் பாட்டி வந்து, இதைத் தான் சொன்னார்; அடுத்து உன் அம்மா வந்தும், இதே கதையைத் தான் சொன்னார்; இப்போது நீங்கள் வந்தும், அதே தான் சொல்லுகின்றீர்; அடுத்து, உங்கள் மகள் வந்தும் இதைத் தான் சொல்ல போகிறார்... ஆனால், நாங்கள் இப்படியே தான் இருப்போம்' என்பார்.
அந்த மூதாட்டியிடம், பிரியங்கா சொன்னதை, தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்ல துவங்கி இருக்கிறார்.'வரும், 2031க்குள் குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற அரசு திட்டமிட்டு உள்ளது' என்று, 'இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்க கூட்டமைப்பு' சார்பில் நடந்த மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
அண்ணாதுரையின் மறைவுக்கு பின், முதல்வர் பதவியில் அமர்ந்த கருணாநிதி, குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு தான், 'குடிசை மாற்று வாரியம்' என்ற ஒன்றையே உருவாக்க்கினார்.குடிசையில் வசிப்போருக்கு, அடுக்கு மாடி கட்டடங்கள் கட்டி, அதில் குடியமர்த்தினார். ஆனால் தமிழகத்தில் குடிசைகள் குறையவில்லை; மாறாக கூடின.
அடுத்து வந்த எம்.ஜி.ஆர்., ஆட்சியிலும், குடிசை வாழ் மக்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டன. அப்போதும், குடிசைகள் குறையவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சியிலும், அடுக்கு மாடி கட்டடங்கள் கட்டப்பட்டு, அதில் குடிசைவாசிகள் குடியமர்த்தப்பட்டனர். குடிசைகளின் எண்ணிக்கை கூடியதே தவிர குறையவில்லை.இப்போது முதல்வர் ஸ்டாலினும், அதே தான் கூறுகிறார்...
அடுத்து அவரது மகன் உதயநிதியும், அதே கதையைத் தான் எடுத்து விடுவார். அதற்கு அடுத்து, உதயநிதியின் மகன் இன்பநிதியும் சரி, இதையே தான் சொல்லப் போகிறார்.எழுதி வைத்து கொள்ளுங்கள்... 2031க்குள் மட்டுமல்ல; 3031க்குள் கூட தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற முடியாது.
முதல்வரின் சொத்து கணக்கு!
அ.சுந்தர சுப்பிரமணியம், பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசு உத்தரவுப்படி, ஆட்சிப்பணி அலுவலர்கள் அனைவரும் தங்கள் சொத்து கணக்கு விபரங்களை வெளியிட வேண்டும் என, தமிழக அரசு முதன்மைச் செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.சில ஆண்டுகளாக இந்த உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், சொத்து கணக்கை காண்பிக்காமல் இருந்து வரும் அதிகாரிகளே அதிகம்!
அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு, தங்களை ஆளும் கட்சிக்கு ஆதரவானவராக காட்டி, 'கல்லா' கட்டும் துறையைப் பெறுவதில் போட்டி போடும் அதிகாரிகள் எண்ணிக்கையே, இந்நாளில் அதிகம். 'மக்கள் பணியே, மகேசன் பணி' என உழைப்பவர் வெகு சிலரே.
கடந்த ஆட்சியில் இருந்ததற்கு சற்றும் குறையாமல் இந்த ஆட்சியிலும், 'வசூல் மன்னர்களாக' திகழும் அதிகாரிகளின் தொடர் கதை, நம் நாளிதழின், 'டீக்கடை பெஞ்சில்' தினமும் வெளியாகி வருவதே அதற்கு சாட்சி.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சொத்து விபரத்தை வெளியிட வேண்டும் என்ற ஆணையை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்.அதிகாரிகள் சரி, அமைச்சர்கள் நிலை என்ன?அரசியல்வாதிகளின் உண்மையான சொத்து கணக்கிற்கும், தேர்தலின் போது காண்பிக்கும் விபரத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?
கடந்த ஆட்சியில் குட்டித் தீவுகளை வாங்கி, பல 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்த அமைச்சர்களின் செயலைக் கண்டு உலகமே மிரண்டது. போதிய ஆதாரங்கள் இருந்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.லண்டனில் 200 டாக்சிகள், பல்வேறு நாடுகளில் விதவிதமாய் தொழில்கள் என, இன்றைய அமைச்சர்கள் குறித்த செய்திகள் கசியத் துவங்கியுள்ளன.
இந்நிலையில், அமைச்சர்களின் சொத்து கணக்கு குறித்த தகவல்களை வெளியிடுமாறு, முதல்வர் ஸ்டாலின் ஆணையிடுவாரா?அதற்கு, முன் மாதிரியாக முதல்வர் ஸ்டாலினும், அவர் குடும்பத்தாரும் தங்கள் சொத்து விபரங்களை வெளியிடுவரா?இதை செய்தால், தமிழகத்தில் விடியல் பிறக்கும். செய்வாரா முதல்வர் ஸ்டாலின்?
கற்றுக்கொள்ளுங்கள்!
என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உண்மையான பயனாளிகளுக்கே, அரசு அளிக்கும் சலுகை சென்றடைய வேண்டும் என்பதில், தற்போதைய தி.மு.க., ஆட்சியாளர்கள் உறுதியாக உள்ளனர்.அதனால் தான், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கும் கீழாக நகைக் கடன் பெற்றவர்கள் பயன் அடைய, சில கட்டுப்பாடுகளை அரசு விதித்தது.அதன்படி, கைநிறைய சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு, இந்த சலுகை பொருந்தாது என்று நெத்தி அடியாகச் சொல்லி விட்டது.
ஏழை, எளியோருக்கு பயன் அளிக்க வேண்டும் என்பதற்காகவே, பொது வினியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.காங்., ஆட்சியில், ரேஷன் கடையில் எதுவுமே இலவசமாகக் கொடுத்தது இல்லை.ரேஷன் அட்டைகளில் அரிசி கார்டு,சர்க்கரை கார்டு என பேதம் எல்லாம் ஏதும் இல்லை.
முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் அரிசி, கோதுமை எல்லாம் இலவசமாக வழங்கப் படவில்லை. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சியிலும் இப்படி எந்தப் பொருளும் இலவசமாக வழங்கப்படவில்லை.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான், விலையில்லா அரிசி, கோதுமை வழங்கப்பட்டது.
நிவாரணம், பொங்கல் பரிசு எல்லாம், அரிசி கார்டு வைத்திருப்போருக்கு மட்டும் வழங்கப் பட்டது. அரிசி கார்டு வைத்திருக்கும் அரசு ஊழியர்கள் எல்லாம் நிவாரணத் தொகை பெற்றனர். இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதனால், உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே, பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற முடிவை, அரசு எடுத்துள்ளது.
மேலும், வருமான வரி செலுத்துவோருக்கு ரேஷன் கடையில் எதுவும் இலவசமாக வழங்கக் கூடாது என்ற நல்ல முடிவை எடுத்து இருக்கிறது.இதைக் கேட்டு, 'பொது வினியோகத் திட்டத்தை பாழாக்க, தி.மு.க., அரசு முயற்சி செய்கிறது. இது அக்கிரமம், அநியாயம்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கொதித்து எழுந்திருக்கிறார்.
உண்மையான பயனாளிகளுக்கு அரசின் சலுகை சென்றடைய வேண்டும் என்பது, அ.தி.மு.க.,விற்கு ஏன் கசக்கிறது?ஆட்சியில் நடக்கும் தீயதை எதிர்த்தும், நல்லதை பாராட்டியும் அரசியல் செய்ய, அ.தி.மு.க., கற்றுக் கொள்ள வேண்டும்.
மரச்சட்டங்களாக மாற்றி விடாதீர்!
க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து அனுப் பிய, 'இ - மெயில்' கடிதம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே நீர்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் மணிகண்டனை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்று, இரவு, 7:30 மணிக்கு திருப்பி அனுப்பி உள்ளனர்.
வீட்டிற்கு வந்த மணிகண்டன், 'போலீசார் என்னை கடுமையாக தாக்கினர்' என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். பின், இரவு 1:00 மணி அளவில் ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார்.சந்தேகத்தின் அடிப்படையில், ஒரு நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லுமுன், அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனரா?சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்து செல்பவரை அடிக்கக் கூடாது என்ற சட்ட விதி, காவல் நிலையத்தில் பின்பற்றப்படுகிறதா?
சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை அழைத்து செல்லும் போலீசார், சீருடை அணிந்திருந்தனரா?மேற்கூறிய அனைத்தும் பின்பற்றப்பட்டால், காவல் நிலையங்களில், 'லாக்கப்' மரணத்தை தடுக்கலாமே!
அரசும், நீதிமன்றமும் இதை கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. அதனால் விசாரணை என்ற பெயரில் போலீசார் அத்துமீறி செயல்படுகின்றனர்.இதன் விளைவே சாத்தான்குளம் விசாரணை நபர்களின் மரணம் நடந்தது; தற்போது முதுகுளத்துார் அருகே கல்லுாரி மாணவரின் மரணம் நடந்துள்ளது.சட்டங்களை வெறும் மரச்சட்டங்கள் ஆக்கிவிடாதீர்... உளுத்துவிடும். எழுதப்பட்டுள்ள சட்டங்களுக்கு மீண்டும் உயிர்கொடுத்து கடுமையாக்குங்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE