சென்னை:காற்றாலை, சூரிய சக்தி மின் நிலையங்கள் வாயிலாக, தெற்கு ரயில்வேக்கு 39.77 கோடி ரூபாய் மின் செலவு குறைந்துள்ளது
.எரிசக்தி பாதுகாப்பு வார விழாவையொட்டி, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில், எரிசக்தி சிக்கன நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த கூட்டம், முதன்மை தலைமை மின்பொறியாளர் ஆர்.கே.மேத்தா தலைமையில் நடந்தது.இந்திய ரயில்வேயில், 2030ம் ஆண்டுக்குள் கார்பன் உற்பத்தி இல்லாத போக்குவரத்து வசதியை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, ரயில்வே காலி இடங்கள், ரயில் நிலையங்களின் மேற்கூரைகளில், சூரிய சக்தி மின் நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. காற்றாலைகள் வாயிலாகவும், மின் உற்பத்தி செய்யப்படுகிறது.தற்போது தெற்கு ரயில்வேயில், 4.9 மெகாவாட் திறனுடைய, சூரிய சக்தி மின் நிலையங்கள் உள்ளன.இதன் வாயிலாக, 2020 - 2021ல், 40 லட்சம் யூனிட் மின்சாரம் கிடைத்து உள்ளது. ஆண்டுக்கு 1.77 கோடி ரூபாய் மின் செலவு குறைந்துள்ளது.
மேலும், 10.5 மெகாவாட் திறன் உடைய காற்றாலை மின் நிலையம் வாயிலாக, 2.6 கோடி யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 38 கோடி ரூபாய் மின் செலவு குறைந்துள்ளது. கார்பன் வெளிபாட்டை குறைக்க, ரயில்வேயில் டீசல் இன்ஜின் ரயில்கள் இயக்கம் குறைக்கப்பட்டு, மின்சார ரயில் இன்ஜின் இயக்கம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இத்தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE